/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்வே தரை பாலத்தில் தேங்கும் கழிவுநீர் ரயில்வே தரை பாலத்தில் தேங்கும் கழிவுநீர்
ரயில்வே தரை பாலத்தில் தேங்கும் கழிவுநீர்
ரயில்வே தரை பாலத்தில் தேங்கும் கழிவுநீர்
ரயில்வே தரை பாலத்தில் தேங்கும் கழிவுநீர்
ADDED : மே 31, 2025 04:25 AM

மேட்டுப்பாளையம்; தேசிய நெடுஞ்சாலை துறையின் மெத்தன போக்கால், காரமடையில், ரயில்வே பாலத்தின் கீழே, ஏழு அடிக்கும் மேல் மழை நீரும், சாக்கடை கழிவுநீரும் தேங்கியுள்ளது.
காரமடையில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ரயில்வே பாதையின் வடக்கே காரமடை நகராட்சியின் இரண்டு வார்டுகளும், தெற்கே ஒரு வார்டும் மேம்பாலத்தின் அருகே உள்ளன. மேம்பாலம் கட்டும்போது ரயில் பாதையின் அடியில், தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.
மேம்பாலம் கட்டி முடித்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாகின்றன. ஆனால் இன்னும் ரயில் பாதையின் அருகில் உள்ள தரைப்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத அளவில், கழிவுநீரும், மழை நீரும் தேங்கியுள்ளது.
இதனால், 50 மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு செல்வதற்கு, மேம்பாலத்தின் வழியாக, இரண்டு கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: 27வது வார்டில் அண்ணா நகர், ஆர்.வி.நகர்., சைக்கிள் ராமசாமி வீதி, மாரியாபுரம் உள்பட ஆறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
மேம்பாலம் ரயில் பாதையின் வடக்கே, 25, 26 ஆகிய இரு வார்டுகளை சேர்ந்த குலாலபுரம், குறிஞ்சி நகர், கே.ஆர்., காலனி உள்பட ஐந்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனங்களில் மேம்பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர். ரயில் பாதையின் கீழே உள்ள ரயில்வே தரைப் பாலம் வழியாக, கார், ஆட்டோ, ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு வசதியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலம் கட்டி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இப்பாலம் திறந்த வெளியாக இருப்பதால், மழை பெய்யும் பொழுதும், மழை நீர் தேங்கி வருகிறது. அதோடு குப்பைகள் நிறைந்த சாக்கடை கழிவு நீர், இரண்டும் சேர்ந்து ஏழு அடிக்கு மேல் தேங்கியுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் சுற்றுப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகம், பாலத்தில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு, மின்மோட்டார் பொருத்திய அறை கட்டியுள்ளது. இன்னும் அதற்கு மின் இணைப்பு வாங்காமலும், செயல்படுத்தப்படாமலும் உள்ளது.
காரமடை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு, இந்த தரைப்பாலமும் ஒரு காரணமாக உள்ளது. தரைப்பாலத்தின் வழியாக ஆம்புலன்ஸ், கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சென்றால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறைய வாய்ப்புள்ளது.
மேம்பாலத்தின் கீழே, ரயில்வே பாதை தரைப்பாலத்தில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றவும், அவ்வழியாக போக்குவரத்து சென்று வருவதற்கான வழியையும், ஏற்படுத்தித் தர வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.