ADDED : ஜூன் 07, 2025 01:15 AM
கோவை; மத்திய அரசின், வளர்ச்சி அடைந்த வேளாண் பிரசார இயக்கத்தின் கீழ், தொண்டாமுத்தூர் பகுதியில், காரிப் பருவ சாகுபடி தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மத்திய அரசு, வளர்ச்சியடைந்த வேளாண் பிரசார இயக்கத்தை அறிவித்துள்ளது. இதன்படி வரும் 12ம் தேதி வரை, விஞ்ஞானிகள் விவசாயிகளைத் தேடிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் அடுத்த புள்ளகவுண்டன்புதூர், சென்னனூர் மற்றும் தென்னமாநல்லூர் கிராமங்களில், ஐ.சி.ஏ.ஆர்., கீழ் இயங்கும், கோவை மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் முகாம் நடந்தது.
மண்ணியல் வல்லுனர் சுகந்தி, தோட்டக்கலை வல்லுனர் சகாதேவன், தொழில்நுட்ப வல்லுனர் பவித்ரா ஆகியோர் பங்கேற்று விவசாயிகளுக்கு , காரிப் பருவ சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர். கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி இசபெல்லா அகர்வால், மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சிவகுமார் ஆகியோர் பங்கேற்று, மத்திய மாநில அரசின் திட்டங்கள், காரிப் பருவ கால நிலைக்கேற்ற புதிய ரகங்கள், தொழில்நுட்பங்கள், உர மேலாண்மை குறித்த தகவல்களை விளக்கினர்.
இந்திய உர கூட்டுறவு (இப்கோ) நிறுவனம் சார்பில், டிரோன் வாயிலாக பூச்சிக்கொல்லி, உரம் தெளித்தல் பற்றி செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.