/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு 'சல்யூட்!' உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு 'சல்யூட்!'
உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு 'சல்யூட்!'
உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு 'சல்யூட்!'
உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு 'சல்யூட்!'
ADDED : ஜூன் 30, 2025 11:26 PM
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால், இன்று இளம்வயதினருக்கு கூட மாரடைப்பும், ரத்த அழுத்தமும் ஏற்பட்டு உயிரிழப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
நோயுற்ற மனிதர்களின் உயிர் காப்பவர்களாக இருப்பவர்கள் டாக்டர்கள். சாவின் விளிம்புக்கு செல்பவர்களையும் தங்களது கைதேர்ந்த சிகிச்சையால் காத்துள்ளனர் டாக்டர்கள் பலர்.
இருக்கும் நாட்களை மகிழ்ச்சியாக வாழவைக்கும், மனித தெய்வங்களாகத் தான் டாக்டர்கள் இருக்கின்றனர். அவர்கள் இல்லை என்றால், இன்று பெரும்பாலானோர் முடமாக, குருடாக, ஊனமாக தான் உலகில் வலம் வந்து கொண்டிருக்க முடியும்.
பெருந்தொற்றுகளான பெரியம்மையும், சின்னம்மையும், போலியோவும், சிக்கன் குனியாவும் நம்மை விட்டு நீங்கியதற்கு, டாக்டர்கள் பலரின் தன்னலமற்ற சேவையே காரணம்.
'உயிர்காப்பான் தோழன்' என்பார்கள். உண்மையில் உற்ற தோழனாக இருந்து மக்களின் உயிர்காப்பவர்கள் டாக்டர்களே.
நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் டாக்டர்கள். கொரோனாவானாலும், கொடிய எய்ட்ஸ் நோயானாலும், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவம் பார்க்கும் டாக்டர்களின் தியாகத்துக்கு, இணை எதுவும் இல்லை.
கொரோனா தொற்றில், உலகமே சிக்கி சின்னபின்னமாகி ஆயிரமாயிரமாய் உயிர்கள் செத்து மடிந்த போதும், லட்சக்கணக்கானோர் மருத்துவமனையை தஞ்சமடைந்த போதும், அத்தனைக்கும் மருந்துகள் செலுத்தி, அரவணைத்து காத்த காட்சிகளை யார் மறந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் நினைவில் இருந்து அவை என்றும் அகலாது. அன்று அவர்கள் களப்பணியாற்றாமல் இருந்திருந்தால், நமக்கு இன்று இவ்வுலகம் இன்பாமாயிருந்திருக்காது.
முடங்கிய உலகத்தை மீட்டெடுத்த, மருத்துவர்களை அவர்களுக்கான நாளில் வாழ்த்துவோம்!