Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரூ. 85 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்: அன்னூருக்கு எந்த பயனும் இல்லை

ரூ. 85 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்: அன்னூருக்கு எந்த பயனும் இல்லை

ரூ. 85 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்: அன்னூருக்கு எந்த பயனும் இல்லை

ரூ. 85 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்: அன்னூருக்கு எந்த பயனும் இல்லை

ADDED : பிப் 12, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
அன்னுார்;அன்னுாரில், 85 கோடி ரூபாயில் கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அன்னுாருக்கு எந்த பலனும் கிடையாது.

அன்னுாரில், குருக்கிளையம்பாளையத்தில் 85 கோடி ரூபாயில் திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி முடிவடைந்துள்ளது.

சர்வதேச தரத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 20 கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கும் திறன் உடையது.

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு அங்கு நீர் எடுக்கப்பட்டு உந்தப்படுகிறது. இங்கு அந்த நீர் ஐந்து கட்டங்களாக சுத்திகரிக்கப்படுகிறது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது பரிசோதனை முடிவுகளை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் நான்காம் குடிநீர் திட்டம் 1191 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை திருப்பூரில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்துள்ளார். இதையடுத்து அன்னுாரில் நடந்த நிகழ்ச்சியில் சுத்திகரிப்பு நிலைய மேலாளர், தொழில்நுட்ப பணியாளர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில்,' கோவை, திருப்பூர் மாவட்டத்திலேயே இந்த சுத்திகரிப்பு நிலையம் தான் அதிக சுத்திகரிப்பு திறன் கொண்டது. தினமும் 20 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்க முடியும். தற்போது ஆற்றில் நீர் குறைவாக வருவதால் தினமும் 7 முதல் 8 கோடி லிட்டர் குடிநீரை சுத்திகரித்து வருகிறோம். இதற்காக 1,600 மி.மீ., விட்டமுள்ள குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து திருப்பூர் மாநகராட்சி வரை மின் மோட்டார் பயன்படுத்தாமலே புவியீர்ப்பு விசையினால் தண்ணீர் அங்குள்ள 70 தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மின்தடை ஏற்பட்டாலும் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படாது. தமிழகத்தில் அரசு சுத்திகரிப்பு நிலையங்களில் அதிக திறன் கொண்ட மூன்றாவது சுத்திகரிப்பு நிலையமாக இது உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அன்னுார் பொதுமக்கள் கூறுகையில்,'6 ஏக்கரில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டும் அன்னுார் ஒன்றியத்திற்கு எந்த பயனும் இல்லை. இதில் சுத்திகரிக்கப்படுகிற நீர் 100 சதவீதம் திருப்பூர் மாநகராட்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அன்னுார் ஒன்றியத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பல கிராமங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அனுப்பப்படும் குடிநீரில் குறைந்தது தினமும் ஒரு மில்லியன் லிட்டராவது கிராம ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அன்னுார் மக்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us