Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சமூக வலைதளங்கள் பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு தேவை ! உடல், மனம் சார்ந்த நோய்கள் தாக்கும் அபாயம்

சமூக வலைதளங்கள் பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு தேவை ! உடல், மனம் சார்ந்த நோய்கள் தாக்கும் அபாயம்

சமூக வலைதளங்கள் பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு தேவை ! உடல், மனம் சார்ந்த நோய்கள் தாக்கும் அபாயம்

சமூக வலைதளங்கள் பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு தேவை ! உடல், மனம் சார்ந்த நோய்கள் தாக்கும் அபாயம்

UPDATED : பிப் 12, 2024 02:25 AMADDED : பிப் 12, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம்;சமூக வலைதளங்களில், நேரத்தை வீணாக்கும் இளைஞர்கள், குழந்தைகளுக்கு உடல், மனம் சார்ந்த நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நவீன யுகத்தில், சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவை ஆகிவிட்டாலும், நம்மில் பலர் தங்களது பொன்னான நேரத்தை, வீணாக சமூக வலைதளங்களில் கழிக்கின்றனர். சமூக வலைதளங்களை,நேரத்தை போக்கவோ, வீணடிக்கவோ பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. இதனால் மனம், உடல் சார்ந்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதன் கூறியதாவது: சமூக வலைதளங்களில் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டு இருக்கும் நபர்களின், கண்கள் சோர்வாக இருக்கும். எதையும் தெளிவாக பார்ப்பதில் ஒரு தயக்கம் இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். மொபைல் போனில், தங்களுக்கு தகவல்கள் வராவிட்டாலும், ஏதாவது தகவல் வந்திருக்கிறதா என்பதை அறிய, அடிக்கடி போனை 'ஆன்' செய்து, சமூக வலைதளங்களில் புதிய தகவல் வந்திருக்கிறதா என, கண்காணித்துக் கொண்டே இருப்பர். இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட நபர், சமூக வலைதளங்களால், பாதிப்படைய தொடங்கி இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த முடியும். பெரும்பாலும் 'டெக்ஸ்ட் மெசேஜ்களாக' உறவினர்களுடனும், நண்பர்களுடனும் பேசும் பழக்கம் வந்துவிடுகிறது. 'ரியல்' வாழ்க்கையில் இருந்து 'ரீல்ஸ்' வாழ்க்கைக்கு மாறிவிடுகின்றனர். இதனால் தனிமனித பணித்திறன் பாதிக்கப்பட்டு, பொதுமக்களும் பாதிக்கின்றனர். உதாரணமாக, ஒரு உயிரை காப்பாற்றும் நிலையில் உள்ள மருத்துவரோ, செவிலியரோ அல்லது பிறரோ தங்கள் பணியின் போது, மொபைல் போனில் உள்ள சமூக வலைதளங்களில் மூழ்கிவிட்டால், ஒரு உயிரே பாதிக்கும் அபாயம் உள்ளது.

இதே போல, குறிப்பிட்ட நபருக்கு எவ்வளவு பாலோயர்ஸ், லைக்குகள், சப்ஸ்கிரைப் வந்துள்ளன என்பதை பார்த்து, பொறாமையால், தங்களை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. தேவையில்லாத பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு, சிறு குழந்தைகள் ஆளாகும் அபாயமும் உள்ளது. இன்னொன்று தூக்கத்தை இழப்பது. சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடுவதால், தூக்கத்தை இழந்து, அதனால் மன நோய்க்கு ஆளாகலாம்.

இதையெல்லாம் மீறி, சமூக வலைதளங்களுக்கு அடிமையான பலர், அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள, மருத்துவ அறிவுரைகள் அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில், 15 தினங்களுக்கு ஒரு முறை மன நல மருத்துவர் வருகிறார். இந்த மனநல மருத்துவ சேவையை, சமூக வலைதளத்தால் பாதித்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு டாக்டர் சேரலாதன் கூறினார்.

பெற்றோருக்கு பெரும் பொறுப்பு

இது குறித்து டாக்டர் சேரலாதன் கூறியதாவது, பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வழங்கலாம். மொபைல் போனை தேவை என்றால் பயன்படுத்தலாம். தேவையில்லாத நேரத்தில், பயன்படுத்த மாட்டேன் என்ற உறுதியுடன் இருக்க, அவர்களுக்கு அறிவுரை வழங்கலாம். தேர்வு நேரத்தில் மாணவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளிலிருந்து வெளியே வந்து விடலாம். பெற்றோர்களுக்கு இவ்விஷயத்தில் குழந்தைகளை, வழி நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு உள்ளது. தினமும் ஒரு மணி நேரம் வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடு என்று கூறலாம். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை துடைத்து சுத்தம் செய், தந்தை, மகன் இருவரும் சைக்கிளிங் செல்லலாம், தாய், மகள் இருவரும் வாக்கிங் செல்லலாம் என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us