Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ரூ.2 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்'; நோட்டீஸ் வழங்கி விட்டு நகரமைப்பு பிரிவு வேடிக்கை

ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ரூ.2 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்'; நோட்டீஸ் வழங்கி விட்டு நகரமைப்பு பிரிவு வேடிக்கை

ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ரூ.2 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்'; நோட்டீஸ் வழங்கி விட்டு நகரமைப்பு பிரிவு வேடிக்கை

ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ரூ.2 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்'; நோட்டீஸ் வழங்கி விட்டு நகரமைப்பு பிரிவு வேடிக்கை

ADDED : ஜூன் 26, 2025 11:27 PM


Google News
கோவை; கோவை மாநகராட்சி, 27வது வார்டு, சாந்தி நகரில், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 9 சென்ட் 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் மட்டும் வழங்கி விட்டு, நகரமைப்பு பிரிவினர் வேடிக்கை பார்க்கின்றனர்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 27வது வார்டில் ஆவராம்பாளையத்தில் சாந்தி நகர் உள்ளது. மொத்தம், 5.4 ஏக்கரில், 55 மனைகளுக்கு நகர ஊரமைப்புத்துறையில் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது.

பொது மக்கள் பயன்பாட்டுக்காக, 10 சதவீதம் 'ரிசர்வ் சைட்' ஒதுக்கீடாக, 9 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இவ்விடத்தை இருவர் ஆக்கிரமித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தினர், மாநகராட்சி கமிஷனரிடம் கொடுத்த மனுவில், 'சாந்தி நகரில் உள்ள ரிசர்வ் சைட் ஒரு பகுதியை ஆக்கிரமித்து பேக்கரி மற்றும் டூவீலர் வாட்டர் வாஷ் நிறுவனம் நடத்துவதற்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது.

இன்னொரு பகுதியை இன்னொருவர் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார். இதுதொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர்அழைத்து பேசினர். அப்போது, 'மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை தனியார் உரிமை கோருவதை ஏற்க வழிவகையில்லை' என அறிவுறுத்தப்பட்டதோடு, 'ஏழு நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்றிக் கொள்ள வேண்டும்' என, நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதில், ஆக்கிரமிப்பை அகற்றியதும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்; கட்டட வரி விதிப்பு நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பைஅகற்றிக் கொள்ளாத பட்சத்தில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகளின் சட்டப்பிரிவு 128(2)ன் படி, மாநகராட்சி மூலம் அகற்றப்படும்; கோர்ட்டிலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நோட்டீஸ் வினியோகித்து ஒரு மாதத்துக்கு மேலாகியும், ஆக்கிரமிப்பை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் இன்னும் அகற்றவில்லை.

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்பது சென்ட் நிலத்தை மீட்காமல், மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us