ADDED : ஜூன் 22, 2025 11:04 PM
நகராட்சி இடத்துல அத்துமீறல்ஆளும்கட்சிய கண்டு அச்சம்
வால்பாறை டவுனில் கவர்மென்ட் இடத்தை ஆக்கிரமிச்சு வச்சிருக்காங்களாம், என, டீ கடையில் இருவர் பேசிக்கொண்டனர். என்ன விஷயம்னு அவங்க உரையாடலை கவனித்தேன்.
வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறுடேம் பகுதியில, அரசு இடத்தை வசதியானவங்க ஆக்கிரமிச்சு வீடு, தங்கும் விடுதி கட்டியிருக்காங்க. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிக 'வாங்க வேண்டியத வாங்கிட்டு' கம்முன்னு இருக்காங்க.
வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில நகராட்சிக்கு சொந்தமான, 25 சென்ட் இடத்தை ஆளும்கட்சிக்காரங்க ஆக்கிரமிப்பு செய்து ெஷட் அமைச்சிருக்காங்க. அந்த இடத்தில் தங்கும் விடுதி கட்டலாம்னு ஐடியா வச்சிருக்காங்களாம்.
இந்த பிரச்னைய எதிர்கட்சிக்காரங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளோட கவனத்துக்கு கொண்டு போயிருக்காங்க. ஆனா, ஒண்ணுமே நடக்காத மாதிரி அதிகாரிக அமைதியா இருக்காங்க.
ஆளும்கட்சிக்காரங்க கிட்ட மோதினா வேற ஊருக்கு துாக்கி அடிச்சிடுவாங்கனு பயந்து அதிகாரிக இருக்கறதால, ஆளும்கட்சிக்காரங்க அட்ராசிட்டி அதிகமாயிட்டு இருக்குனு பேசிக்கிட்டாங்க.
டாஸ்மாக்ல கூடுதல் கட்டணம்எந்த உத்தரவுக்கும் கட்டுப்படல
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், பயணியர் காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்த 'குடி'மகன்கள் இருவர், 'என்ன உத்தரவு போட்டாலும், டாஸ்மாக் கடையில கூடுதலா பணம் வாங்கறத நிறுத்த மாட்டாங்க,' என பேசிக்கொண்டிருந்தனர். என்ன மேட்டர்னு கவனித்தேன்.
டாஸ்மாக் கடைகளில், பாட்டிலுக்கு 10 ரூபா முதல் பிராண்டுக்கு ஏற்ப 50 ரூபா வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கறாங்க. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கற விதமா, டாஸ்மாக் கடையில பில் போட்டு 'சரக்கு' விற்பனை செய்யவும், யு.பி.ஐ., மற்றும் கிரெடிட், -டெபிட் கார்டு வாயிலா பணம் பெறவும் நடவடிக்கை எடுத்தாங்க.
ஆனா, பொள்ளாச்சியில இருக்கற டாஸ்மாக் கடைகள்ல, பில் போட்டு 'சரக்கு' விற்கறது இல்லை. தொழில்நுட்பக் கோளாறுனு ஏதாவது ஒரு காரணத்த கூறி, டாஸ்மாக் ஊழியர்கள் பில் போடாம விற்கறாங்க. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலா பணம் வாங்கறது தொடர்கதையா இருக்கு.
இதுல, ஆளும்கட்சியினருக்கும், அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கறதால, டாஸ்மாக் கடையில நடக்கற விதிமீறல் எதையும் கண்டுக்காம இருக்காங்கனு, உரையாடலை நிறைவு செய்தாங்க.
ஆசிரியர்கள கருத்தாளராக்கிட்டாங்கபள்ளியில வகுப்பு எதுவும் நடக்கல
உடுமலை பஸ் ஸ்டாண்டில், 'பயிற்சிக்கு டைம் ஆயிருச்சுனு,' ஆசிரியர்கள் வேகவேகமாக பஸ் ஏறினர். என்ன பயிற்சினு விசாரித்தேன்.
உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகள்ல, கல்வியாண்டு துவங்கினதும், இன்னும் வகுப்புகள் தீவிரமடையல. ஆசிரியர்கள் இல்லாமல் இரண்டு வகுப்பு மாணவர்களையும் ஒரு ஆசிரியரே சமாளிக்க வேண்டியிருக்கு.
பள்ளி துவங்கினதும், ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்த துவங்கிட்டாங்க. இதனால, ஒருவர் மாற்றி ஒருவர் பயிற்சிக்கு போக வேண்டியிருக்கு. பயிற்சி வழங்கும் கருத்தாளர்களாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள நியமிச்சிருக்காங்க. இதனால சில பள்ளில, பயிற்சி முழுமையா முடியும் வரை ஆசிரியர் பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கு.
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவே ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்துல, ஆசிரியர் பயிற்றுனர்கள் இருக்காங்க. அவர்கள விட்டுட்டு, ஆசிரியர்களை கருத்தாளர்களா மாற்றி பயிற்சி கொடுக்கறதால, மாணவர்களுக்கு பாடம் நடத்தறது பாதிக்குது. ஆனா, பாடங்களை முடிக்க வேண்டிய நேரத்துக்கு கட்டாயம் முடிக்கணும். ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு என்ன வேலைனு தெரியலனு, விவரத்த சொன்னாங்க.
சேவை கட்டணம் தாறுமாறுகடிவாளம் போடுவது யாரு?
உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட்டில் மூதாட்டிகள் இருவர் நிழற்கூரையில் அமர்ந்து புலம்பி கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...
'இருப்பிட சர்டிபிகேட்' ரேஷன் கார்டுல பேர் மாத்தறதுக்கு, விண்ணப்பிக்க, நாலு தடவ டவுனுக்கு வந்தாச்சு. கிராமத்துல இந்த வேலைக்கு லேட் ஆகும்னு டவுனுக்கு அனுப்பி விடறாங்க.
டவுன்ல கவர்மென்ட் மையத்தில் கூட்டமாக இருக்குதுன்னு, தனியார் மையத்துக்கு போனேன். அங்கே போனா, கொள்ளை கட்டணம் கேட்கறாங்க.
அரசாங்கம், 60 ரூபாய் நிர்ணயிச்சா, இவங்க, 150 ரூபா கேட்கறாங்க. ஒரு சில வேலைக்கு, 250-500 ரூபா வரைக்கும் பணம் வாங்கறாங்க. நாங்களே அதிகாரிங்ககிட்ட பேசி சீக்கிரமா சர்டிபிகேட் வாங்கி தந்துருவோம்னு சொல்றாங்க.
நாமளும் சீக்கிரமா வேலை முடியட்டும்னு, கேட்கற பணத்த கொடுத்துட்டு போக வேண்டியிருக்குது. நுாறு நாள் வேலைல வர்ற சம்பளத்துல, இந்த மாதிரி வேலைக்கே பாதி பணம் செலவாகுது.
இதப்பத்தி யார் கிட்ட புகார் பண்றதுன்னு தெரியல. கவர்மென்ட் கிராமத்துல கூடுதலா சேவை மையம் ஆரம்பிச்சா இந்த பிரச்னையெல்லாம் இருக்காது. எந்தெந்த வேலைக்கு எவ்வளவு கட்டணம் அப்படின்னு வெளிப்படையா சொன்னா கூட நாம தட்டிக்கேட்கலாம்னு, பேசிக்கிட்டாங்க.
பிளாட்பாரத்துல குளிக்கறாருரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரு
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு நண்பரை அழைத்து வர சென்றிருந்தேன். நண்பர் வந்ததும் வராததுமாக புலம்ப ஆரம்பித்தார். என்னனு கேட்டேன்.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு, பொள்ளாச்சியில இருந்து கோவை போகறதுக்கு, தினமும் காலையில, 8:25 மணிக்கு ரயில் புறப்படுது. ஆனா, கிணத்துக்கடவுல இருக்கிற ஸ்டேஷன் மாஸ்டர், இந்த ரயில் கிணத்துக்கடவ கிராஸ் பண்ணினதும், ரெண்டாவது பிளாட்பார்ம்ல ஜாலியா குளிக்கறாரு.
இவருக்கு தனியா ரூம், பாத்ரூம் வசதி எல்லாம் இருந்தும் இப்படி செய்யறாரு. அங்க சி.சி.டி.வி., கேமரா இருந்தும், இதெல்லாம் நடக்குது. ஒருவேளை அந்த கேமரா எதுவும் வேலை செய்யலையானு தெரியல. ரயில்வே ஸ்டேஷனுக்கு வர்றவங்க எல்லாரும், ஸ்டேஷன் மாஸ்டரே இப்படி பண்றாரேனு அதிர்ச்சியா பார்த்துட்டு போறாங்க. இத ரயில்வே அதிகாரிங்க கவனிச்சு, ஸ்டேஷன் மாஸ்டருக்கு நம்ம ஊரு கலாசாரத்த சொல்லிக்கொடுத்தா நல்லா இருக்கும்னு, சொன்னாரு.