Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரேபிஸ் பாதித்த  நாய் கருணை கொலை; லாலி ரோட்டில் நாய் கடிபட்டவர்கள் உஷார்

ரேபிஸ் பாதித்த  நாய் கருணை கொலை; லாலி ரோட்டில் நாய் கடிபட்டவர்கள் உஷார்

ரேபிஸ் பாதித்த  நாய் கருணை கொலை; லாலி ரோட்டில் நாய் கடிபட்டவர்கள் உஷார்

ரேபிஸ் பாதித்த  நாய் கருணை கொலை; லாலி ரோட்டில் நாய் கடிபட்டவர்கள் உஷார்

ADDED : மே 10, 2025 07:44 AM


Google News
கோவை : கோவை அரசு மருத்துவமனையில், ரேபிஸ் பாதிப்புக்கு உள்ளான வளர்ப்பு வீட்டு நாய் கடித்து இருவர், சிகிச்சை பெற்று வருகின்றனர். நாய் கருணைக்கொலை செய்யப்பட்டது.

லாலிரோடு பகுதியில் சந்திரன், 60 என்பவர் வசித்து வருகிறார். சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த யுவராஜ், 32, அப்பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார். சந்திரனின் வளர்ப்பு நாய் இருவரையும் கடித்துள்ளது.

இந்நாய் வழக்கத்தை காட்டிலும் ஆக்ரோஷமாக இருந்ததால், ஹூயூமேன் அனிமல் சொசைட்டி அமைப்பினருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நாயை கருணைக்கொலை செய்தனர்.

இதுகுறித்து, ஹூயூமேன் அனிமல் சொசைட்டி அமைப்பின் நிர்வாக இயக்குனர் மற்றும் டாக்டர் மினி வாசுதேவன் கூறியதாவது:

தகவல் தெரிந்தவுடன் நேரில் சென்று பார்த்தோம். நாய் ஆக்ரோஷமாக இருந்தது. ரேபிஸ் அறிகுறிகள் தெரிந்தன. இரு நாட்கள் இரவு முழுவதும் கண்காணித்து பின்னர், மிகவும் சிரமப்பட்டதால் நேற்று முன்தினம் காலை, கருணை கொலை செய்யப்பட்டது.

இறந்த நாயை உடற்கூறு பரிசோதனை செய்ததில், ரேபிஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், உடனடியாக அப்பகுதியில் உள்ள, பிற நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கியுள்ளோம்.

அப்பகுதியில் நாய் கடிக்கு ஆளானவர்கள் இருப்பின், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். நாய் கடித்தால் அலட்சியம் கூடாது.

வீட்டில் வளர்க்கும் நாய்க்கு, கட்டாயம் ஆண்டுதோறும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

பலர், சின்ன வயதில் தடுப்பூசி செலுத்தினோம் என்று அலட்சியமாக இருப்பதை காணமுடிகிறது. ரேபிஸ் 100 சதவீதம் வரும் முன் தடுக்கலாம்; வந்த பின் குணப் படுத்த முடியாது. இறப்பு கட்டாயம் ஏற்படும்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் ரேபிஸ் அறிகுறியுடன் நாய்கள் இருந்தால், அதனை அடிக்காமல் 98437-89491 என்ற, ரேபிஸ் அவசர அழைப்பு எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us