ADDED : செப் 11, 2025 09:41 PM
அன்னுார்; மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் நாளை (13ம் தேதி) புரட்டாசி திருவிழா துவங்குகிறது.
அன்னுார் அருகே உள்ள மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் 350 ஆண்டுகள் பழமையானது. மேலைத் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.
திருப்பதியைப் போலவே ஏழு குன்றுகளை தாண்டி இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஆறு சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து பெருமாளை தரிசிப்பர்.
இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா நாளை (13ம் தேதி) துவங்குகிறது. அதிகாலை 5:00 மணிக்கு மகா அபிஷேகம், திருமஞ்சனம், நடைபெறுகிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, பஜனை, பிருந்தாவன இசைக்கச்சேரி கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.
இரவு 7:30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.