ADDED : அக் 16, 2025 08:40 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் -முத்துமலை முருகன் கோவில் செல்லும் ரோட்டில் புதிய மின்கம்பம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கவுண்டனூர் முதல், முத்துமலை முருகன் கோவில் செல்லும் ரோட்டின் இரு பகுதியிலும் மரங்கள் மற்றும் இயற்கை சூழல் நிறைந்து காணப்படுகிறது. இந்த ரோட்டில் தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.
தற்போது, இந்த ரோட்டில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்க, ரோட்டோரத்தில் புளிய மரங்கள் உள்ள பகுதியில் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது.
மேலும், மின் ஒயர்கள் இணைப்பு பணிகள் துவங்கப்பட்டால், ரோட்டோரம் உள்ள மரக்கிளைகள் அதிக அளவில் வெட்டும் சூழ்நிலை உள்ளது. இதனால், இயற்கை சூழல் பாதிக்கும்.
தற்போது, கம்பம் நடப்பட்ட பகுதியின் எதிர் திசையில் மரங்கள் இல்லாததால், மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மக்கள் கூறியதாவது:
முத்துக்கவுண்டனூர் ரோட்டில் புதிதாக மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர் அமைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது.
மின் ஒயர்கள் இணைக்கப்பட்டால் மரக்கிளைகள் வெட்டப்படும். அப்படியே மரக்கிளையை, வெட்டி அகற்றினாலும், வரும் காலத்தில் மீண்டும் மரக்கிளைகள் வளரும். இதனால் மழைக்காலங்களில், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே, மரங்கள் இல்லாத பகுதியில் மின்கம்பங்களை நடுவதற்கும், டிரான்ஸ்பார்மர் அமைக்கவும், மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.


