/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவில் நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்பு; மீட்டெடுக்க கிராம மக்கள் மனு கோவில் நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்பு; மீட்டெடுக்க கிராம மக்கள் மனு
கோவில் நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்பு; மீட்டெடுக்க கிராம மக்கள் மனு
கோவில் நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்பு; மீட்டெடுக்க கிராம மக்கள் மனு
கோவில் நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்பு; மீட்டெடுக்க கிராம மக்கள் மனு
ADDED : ஜூன் 04, 2025 08:38 PM
பொள்ளாச்சி; சோமந்துறைசித்துார் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம், தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர்.
ஆனைமலை அருகே சோமந்துறைசித்துார் கிராமத்தில், பாரம்பரியமிக்க மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், சோமந்துறைசித்துார், ரமணமுதலிபுதுார், கரியாஞ்செட்டிபாளையம், பில்சின்னாம்பாளையம், தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவு, ஹிந்துசமய அறநிலையத்துறை கமிஷனர், கோவை மண்டல இணை கமிஷனர் உள்ளிட்டோருக்கு புகார் மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.
மனுவில் கூறியிருப்பதாவது:
சோமந்துறைசித்துார் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் (பட்டா எண், 215, 213) கோவில் கட்டுவதற்கு ஊர்மக்கள் ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது, வருவாய்த்துறையின் 'சிட்டா' வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஆர்.எஸ்.ஆர்.,ல் கோவில் நிலம் என்றும் நிரூபணமாகியுள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து, மீட்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சோமந்துறைசித்துார் மாரியம்மன் கோவில் நிலம் தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து, முறையாக ஆய்வு நடத்தப்படும். உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.