Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விசைத்தறி ஸ்டிரைக்; நுாற்பாலைகளில் ரூ.50 கோடி நுால் தேக்கம்

விசைத்தறி ஸ்டிரைக்; நுாற்பாலைகளில் ரூ.50 கோடி நுால் தேக்கம்

விசைத்தறி ஸ்டிரைக்; நுாற்பாலைகளில் ரூ.50 கோடி நுால் தேக்கம்

விசைத்தறி ஸ்டிரைக்; நுாற்பாலைகளில் ரூ.50 கோடி நுால் தேக்கம்

ADDED : மார் 25, 2025 10:25 PM


Google News
Latest Tamil News
கோவை; விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தால், நூற்பாலைகளுக்கு தினமும் ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால், கோவை மாவட்டத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என, நூற்பாலை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) தலைவர் ஜெயபால் கூறியதாவது:

தமிழகத்தில், 650 ஓ.இ., நூற்பாலைகளும், 1,700 ஸ்பின்னிங் நூற்பாலைகளும் உள்ளன. 5.5 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. 17 மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி நடக்கிறது.

விசைத்தறிகள் வேலை நிறுத்தம் என்பது, வேறெந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களிலும் இல்லாத அளவுக்கு, பெரும் பிரச்னையாக உள்ளது.

விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தால் நூற்பாலைகள் பாதிக்கப்படுகின்றன, நூல்கள் தேங்குகின்றன. வேலை நிறுத்தத்துக்கு முன்பே கிலோவுக்கு ரூ.15 வரை விலை குறைந்து விட்டது. தற்போது ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்னும் குறைத்துக் கேட்கின்றனர்.

கழுத்தை நெரிக்கும் மின்சார கட்டணம்


உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நூற்பாலைகள், தினமும் ரூ.7,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை மின்சார நிலைக்கட்டணம் செலுத்த வேண்டும். தாழ்வழுத்தம் பயன்படுத்துவோர் மாதம் ரூ. 17, 950 செலுத்த வேண்டும். மில் இயங்காவிட்டாலும், இதைச் செலுத்தியே ஆக வேண்டும். வணிகவரி செலுத்த வேண்டும். இக்காரணங்களால் நூலை கிடைத்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

உண்மையில் இதனைக் கூலி என்ற பிரச்னையாக பார்க்காமல், இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தக் கட்டணப் பிரச்னையாகவே, பார்க்க வேண்டும்.

முத்தரப்பு கமிட்டியால் தீர்வு


50 ஆண்டுகள் பழமையான விசைத்தறிகளுக்கு, புதிய விசைத்தறிகளுக்கு இணையான கட்டணம் கேட்பதுதான் பிரச்னை என்கின்றனர் ஜவுளி உற்பத்தியாளர்கள். ஜவுளித்துறை, நூற்பாலைகள், விசைத்தறி என முத்தரப்பு கமிட்டி அமைத்து, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கோவை மாவட்டத்தில் மட்டும் அவ்வப்போது வேலைநிறுத்தம் தொடர்கிறது. இதனால், நூல் விலை வீழ்ச்சி, தொழிலாளர் சம்பளம், வங்கிக் கடன் என, நஷ்டம் ஏற்படுகிறது.

அரசு துரிதமாக நிரந்தர தீர்வு காண வேண்டும். வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் வரை, மின் கட்டணம் செலுத்த அவகாசம், நிலைக்கட்டணத்தில் விலக்கு, வணிக வரி, வங்கிக் கடன் செலுத்த அவகாசம் அளிக்க வேண்டும். அரசு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

'நுாற்பாலைகள் வெளியேறும்'

ஜெயபால் கூறுகையில், ''ஏற்கனவே, நூற்பாலைகள் பல, நம் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டன. இதுவரை ரூ.50 கோடி மதிப்பிலான நூல்கள் தேங்கியுள்ளன. ஓ.இ., மில்களில் தினமும் ரூ. 30 லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்ற பெருமைமிக்க கோவையை விட்டு, நூற்பாலைகள் வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us