/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நோய்த்தொற்றினால் மக்கள் பாதிப்பு; தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம்நோய்த்தொற்றினால் மக்கள் பாதிப்பு; தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம்
நோய்த்தொற்றினால் மக்கள் பாதிப்பு; தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம்
நோய்த்தொற்றினால் மக்கள் பாதிப்பு; தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம்
நோய்த்தொற்றினால் மக்கள் பாதிப்பு; தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம்
ADDED : ஜன 10, 2024 10:22 PM
உடுமலை : பெரியகோட்டை ஊராட்சியில், சுகாதார நடவடிக்கைகள் தொய்வடைந்துள்ளதால், நோய்த்தொற்று அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உடுமலை நகரையொட்டி உள்ள பெரியகோட்டை ஊராட்சியில், குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. இருப்பினும், குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வில்லை.
இதில் முக்கியமான சுகாதாரம், பெரும்பான்மையான பகுதிகளில் கேள்விக்குறியாக உள்ளது. மேலும், ரோடு வசதி இல்லாமல் சிதிலமடைந்தும், ரிசர்வ் சைட்கள் மற்றும் காலி மனைகள் பராமரிப்பில்லாமல் இருப்பதால், புதர்க்காடுகளாக செடிகள் வளர்ந்தும், மழைநீர் தேங்கியும் காணப்படுகிறது.
இதனால் நேரு நகர், உட்பட சுற்றுப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து, பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களில் மட்டுமே, நோய்த்தொற்றினால் பலரும் அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கழிவுகள் தேங்குவதால், கொசுப்புழு உற்பத்தி அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த புகை மருந்து அடிப்பதற்கு, ஊராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை வைத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரிப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
தற்போது பருவநிலை மாற்றம் இருப்பதால், நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நோய் பரவலுக்கு கொசுத்தொல்லையும் முக்கிய காரணமாக இருப்பதாகவும், அவர்கள் கூறுகின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, கொசுப்புழு ஒழிப்புக்கு புகை மருந்து கேட்டாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.