Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மரப்பேட்டை நூலக கட்டடம் கட்டும் பணியில் அரசியல் தலையீடு! கலெக்டர் உத்தரவிட்டும் இடத்தை பறிக்க முயற்சி

மரப்பேட்டை நூலக கட்டடம் கட்டும் பணியில் அரசியல் தலையீடு! கலெக்டர் உத்தரவிட்டும் இடத்தை பறிக்க முயற்சி

மரப்பேட்டை நூலக கட்டடம் கட்டும் பணியில் அரசியல் தலையீடு! கலெக்டர் உத்தரவிட்டும் இடத்தை பறிக்க முயற்சி

மரப்பேட்டை நூலக கட்டடம் கட்டும் பணியில் அரசியல் தலையீடு! கலெக்டர் உத்தரவிட்டும் இடத்தை பறிக்க முயற்சி

ADDED : ஜன 04, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மரப்பேட்டை நுாலக கட்டடம் இடிக்கப்பட்டு, இன்னும் கட்டுமானப்பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. ஆளுங்கட்சி பிரமுகரின் தலையீட்டால் அந்த இடத்தில் கட்டட பணிகளை துவங்குவது இடையூறு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பொது நுாலகத்துறைக்கு சொந்தமான கிளை நுாலகம், பொள்ளாச்சி மரப்பேட்டையில், 12 சென்ட் இடத்தில் கடந்த, 1954ல் அமைக்கப்பட்டது. ஒரு லட்சம் நுால்கள், 16 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட நுாலகமாக செயல்படுகிறது.

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் செயல்படும், 40 ஊர்ப்புற, பகுதிநேர மற்றும் கிளை நுாலகங்களின் ஊதிய மையமாகவும் உள்ளது. 69 ஆண்டுகள் பழமையான நுாலகத்தின் கட்டடம் மழைக்கு ஒழுகியதுடன் பரிதாபமான நிலைக்கு மாறியது. மழை நீர் உள்ளே புகுந்ததால், புத்தகங்களை பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.

நீண்ட கால போராட்டத்துக்கு பின், கடந்த, 2019ம் ஆண்டு நுாலகம் பழைய குடிமைப்பொருள் தாசில்தார் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அங்கு போதுமான கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை; வாசகர்கள் அமர்ந்து படிக்க இட நெருக்கடியாக உள்ளது.

இந்நிலையில், நுாலக இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்காக கடந்தாண்டு செப்., மாதம் பழமை வாய்ந்த கட்டடம் இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டன. மொத்தம், ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும் என நுாலகத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கட்டுமானப் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.

பின்னணி என்ன?


நகராட்சி கந்தசாமி பூங்கா அருகே, கடந்த, 1954ல் அப்போதைய நகராட்சி தலைவர் நாச்சிமுத்து தலைமையில் நடந்த நகராட்சி சிறப்பு கூட்டத்தில், கட்டடத்தையும், தளவாட பொருட்களையும் நுாலகத்துறை பராமரிப்பு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வழங்கப்பட்டதாக தெரிகிறது. அந்த கட்டடம் தற்போது, நுாலகத்துறை பராமரிப்பில் உள்ளது.

இந்நிலையில், இந்த இடத்தை தராமல் மீண்டும் எடுத்துக்கொள்ள நகராட்சி தரப்பில் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இடிக்கும் பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர், இங்கு நுாலகம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதற்காக மாவட்ட நிர்வாகம் வரை அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இப்பிரச்னை குறித்துஆளுங்கட்சி தலைமைக்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஏனிந்த இடையூறு!


வாசகர்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி அருகே உள்ள பகுதிகளில் எல்லாம், நுாலகங்கள் தரம் உயர்வு, டிஜிட்டல் மயமாக மாற்றுதல் என அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்கின்றன. அதே நேரத்தில், பொள்ளாச்சியில் உள்ள ஒரு நுாலகத்துக்கு கட்டடம் கட்டுவதற்கே போராட வேண்டிய நிலை உள்ளது.

பெயர் பெற்ற நுாலகத்துக்கு கட்டடம் கட்ட ஆளுங்கட்சியினர் ஏன் இடையூறு செய்கின்றனர் என, தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில் விரைவில் நுாலகத்துறை இங்கு கட்டுமானப்பணிகளை துவங்க வேண்டும்,' என்றனர்.

ஆட்சேபனை இல்லை


நகராட்சி அதிகாரிகள், 'நுாலக கட்டடம் உள்ள இடம் நகராட்சி வசம் உள்ளது. எனினும், ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி வழங்கியுள்ளதுடன், மாவட்ட கலெக்டர் கடிதமும் உள்ளதால், ஆட்சேபனை தெரிவிக்க முடியாது. இதற்கு மேல் என்ன காரணத்தால் கட்டடம் கட்டப்படாமல் உள்ளது என தெரியவில்லை,' என்றனர்.

வாசகர்கள் எதிர்பார்ப்பு


நுாலகத்துறைக்கு அந்த இடத்தில் கட்டடம் கட்ட கடந்த, 2019ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் அனுமதி கொடுத்தார். அந்த கடிதத்துடன் தற்போது மாவட்ட நிர்வாக அனுமதி பெற்று கட்டுமானப்பணிகளை துவங்க நுாலகத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, நுாலகத்துக்கு நிரந்தர கட்டடம் கட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us