ADDED : பிப் 12, 2024 12:36 AM
கஞ்சா விற்றவர்கள் கைது
பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், ஆழியாறு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பி.ஏ.பி., கால்வாய் மின்வாரிய அலுவலகம் அருகே சந்தேகப்படும் படி நின்ற நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், கஸ்துாரிநாயக்கன்பாளையத்தைச்சேர்ந்த அய்யப்பன்,32, வேடசந்துாரை சேர்ந்த சரவணன், 42, என்பவரிடம் தனது சொந்த பயன்பாட்டுக்காக வைத்து இருந்த, 500 கிராம் கஞ்சாவை வாங்கினார்.
பின்னர், அதை, பொள்ளாச்சி பெரியார் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ், சூளேஸ்வரன்பட்டியைச்சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் தேவராஜியிடம் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெண் தற்கொலை: விசாரணை
ஆனைமலை மாரப்பகவுண்டன்புதுாரைச்சேர்ந்த கவுசல்யா, 21. இவர், கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையைச்சேர்ந்த காளிமுத்துக்குமரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர், இளநீர் இறக்கும் கூலி வேலைக்கு சென்று வந்தார்; இரண்டு வயது மகன் உள்ளார்; கவுசல்யாவும் அவ்வப்போது கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார்.
கவுசல்யா, மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வேலைக்கு சென்ற போது அபார்ஷன் ஆனது. இதனால், மனமுடைந்த அவர் புலம்பி வந்தார்.
காளிமுத்துக்குமரனும், அவரது மகனும் வெளியே சென்ற போது சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்த போது, கவுசல்யா இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மது விற்றவர் கைது
ஆனைமலை போலீசார், மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் மதுக்கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 43, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.