தீ விபத்தில் வீடு சேதம்
பொள்ளாச்சி நகராட்சி வாட்டர்மேன் பாலசுப்ரமணியம், சேர்மன் வீதியில் வாடகை வீட்டில் வசிக்கிறார். நேற்று காலை இவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் சேதமடைந்தது. மேலும், வீட்டின் அருகே இருந்த கண்ணாம்பாள் என்பவரின் வீட்டிலும் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வீட்டில் மின்சார பல்பு எரிய விட்டு சென்ற நிலையில் அதிகளவு வெப்பமாகி தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம், என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் தொழிலாளி பலி
பொள்ளாச்சி அருகே, பூச்சனாரியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலாஜி, 20. அதே பகுதியை சேர்ந்த கவுதம், 20, எஸ்.கவுதம், 19, ஆகியோர் பைக்கில், ஜமீன் ஊத்துக்குளியில் பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றனர். அப்போது, ஜமீன் ஊத்துக்குளி பெட்ரோல் பங்க் அருகே, எதிரே வந்த கார், பைக் மீது மோதியதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த பைக்கில் சென்ற மற்ற இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டி வந்த கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த சதிஷ்குமார்,40, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.
மது விற்றவர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கோட்டைசாமி, 31. இவர், கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் மயானம் அருகே மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த கிணத்துக்கடவு போலீசார், சந்தேகத்தின் பேரில் கோட்டைசாமியை விசாரித்ததில், அவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது உறுதியானது. இதை தொடர்ந்து, கோட்டைசாமியை போலீசார் கைது செய்து, 8 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
விபத்தில் பெண் காயம்
கோவை, ஒண்டிபுதுாரை சேர்ந்தவர் கவுசல்யா, 40. இவர், பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தாமரைக்குளம் அருகே, ரோட்டை கடந்த போது அதிவேகமாக வந்த டெம்போ கவுசல்யா மீது மோதியது. விபத்தில், படுகாயமடைந்த அவர், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.