/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விலங்குகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் விலங்குகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக்
விலங்குகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக்
விலங்குகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக்
விலங்குகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக்
ADDED : மே 24, 2025 05:52 AM

தொண்டாமுத்தூர் : கோவை மாவட்டத்தில், கிராமப்புறங்களில் குப்பை மேலாண்மை என்பது காற்றில் பறக்கும் திட்டமாகவே செயல்பட்டு வருவதால், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கோவை புறநகர் பகுதிகளில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது, மக்கள் தொகை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தினசரி குப்பை சேகரிக்கும் அளவும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஊராட்சிகளில், குப்பை மேலாண்மை என்பது பெயரளவிற்கு மட்டுமே செயல்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை மையங்களில், சேகரிக்கப்படும் குப்பையை, தீ வைத்து எரிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது.
ஊருக்குள் இட வசதி இல்லாததால், மலை அடிவாரத்தை ஒட்டிய புறம்போக்கு நிலங்களில், ஊராட்சி நிர்வாகங்கள் டன் கணக்கில் குப்பைகளை கொட்டி வருகிறது.
எடுத்துக்காட்டாக, மருதமலை அடிவாரத்தில், சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஐந்து ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பையால், இரண்டு நாட்களுக்கு முன்பு, உயிரிழந்த பெண் யானை அதிகளவு பிளாஸ்டிக் உட்கொண்டு இறந்தது நிரூபணமானது. யானை உயிரிழந்த பின், அப்பகுதிகளில் மீண்டும் குப்பை கொட்டப்படாது. குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு எடுத்துச் சென்று கொட்டப்படும் என, உள்ளாட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால், இங்கு குப்பை கொட்டக்கூடாது என, பெயரளவிற்கு மட்டும் போர்டு வைத்துவிட்டு, அவ்விடத்தை தடை செய்யாமல் வெறும் அகழி மட்டும் தோண்ட ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள காலியிடங்களில், பலரும் வந்து மது அருந்தி செல்கின்றனர். அவர்கள், மது பாட்டிலையும், பிளாஸ்டிக் குப்பையையும் அங்கேயே விட்டுச் செல்கின்றனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள், அவ்வாறு விட்டுச்செல்லும், பிளாஸ்டிக் குப்பைகளை உண்கிறது. மது பாட்டில்கள் உடைந்து, வனவிலங்குகளின் கால்களில் குத்தி, காயம் ஏற்பட்டு, வனவிலங்குகள் நடக்க முடியாமல் போகும் சம்பவங்களும் நடக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பை குவியலில், வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் குப்பையில் உள்ள உணவுகளை உண்ணும்போது, பிளாஸ்டிக் குப்பையையும் சேர்ந்து உண்கிறது.
அரசு துறைகள் ஒருங்கிணைவது அவசியம்
பிளாஸ்டிக் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால், பெயரளவுக்கு மட்டும் பிளாஸ்டிக் ஒழிப்பு இல்லாமல், முற்றிலும் பிளாஸ்டிக் ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக்கால், வீட்டில் வளர்க்கும் விலங்குகள் மட்டுமின்றி, வனவிலங்குகளும் உயிரிழப்பதால், வனத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகங்கள் இணைந்து செயல்பட வேண்டும். அதோடு, வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில், மது அருந்திவிட்டு, மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டு செல்வதை தவிர்க்க, உள்ளூர் போலீசாரும், தங்களது ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகும். எனவே, பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், அதனால் விலங்குகள் உயிரிழப்பதை தடுக்கவும், மாவட்ட நிர்வாகம் தனிக்குழுவை உருவாக்கி, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.