/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/977 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் 977 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
977 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
977 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
977 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
ADDED : பிப் 10, 2024 01:16 AM

பொள்ளாச்சி:''தமிழகத்தில், கோவிட் 19 காலத்தில் பணி நியமிக்கப்பட்டு, அதன்பின் பணி விடுப்பு செய்யப்பட்ட, 977 தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் பிப்., மற்றும் ஆக., மாதத்தில் குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்பட்டு, ஒரு வயது முதல், 19 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும், 20 - 30 வயது பெண்களுக்கும், குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
அரசு, தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், அங்கன்வாடி மையங்கள் என, மொத்தம், ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து, 887 இடங்களில், குடற்புழு நீக்க மாத்திரகைள் வழங்கப்படுகின்றன.
இப்பணியில், அங்கன்வாடி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்து, 30 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
சிறார்கள் மற்றும் பெண்கள் என, 2 கோடியே, 69 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 'கோவிட் 19' காலத்தில் நோயாளிகள் நலன் கருதி, செவிலியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக ஒப்பளிப்பு செய்து ஆணை வழங்கப்பட்டது. அதில் கடந்த, 2022ம் ஆண்டு மார்ச் மற்றும் டிச., மாதங்களில், பணி விடுப்பு செய்யப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, தற்போது, 977 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதி வழங்கினார். அவர்களுக்கான பணி ஆணை வரும், 12ம் தேதி வழங்கப்பட உள்ளது.
சுகாதாரத்துறையை பொறுத்த வரை, 864 செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளன. இருந்தாலும், 977 பணியிடங்களுக்கு நியமனங்கள் தரப்படுகின்றன.புதியதாக உருவாகும் காலிப் பணியிடங்களை மனதில் வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
எலி காய்ச்சல் குறித்து தகவல் தெரிந்ததும், உசிலம்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு எப்படி வந்தது, குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.