Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீடுகளில் சோலார் பேனல் அமைக்க மக்களிடையே ஆர்வம்! ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

வீடுகளில் சோலார் பேனல் அமைக்க மக்களிடையே ஆர்வம்! ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

வீடுகளில் சோலார் பேனல் அமைக்க மக்களிடையே ஆர்வம்! ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

வீடுகளில் சோலார் பேனல் அமைக்க மக்களிடையே ஆர்வம்! ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

ADDED : செப் 04, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், வீடுகளில் சோலார் பேனல் அமைக்க, மக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

மத்திய அரசு, சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை கடந்தாண்டு துவக்கியது. அதன்படி சூரிய சக்தி மின்சாரத்தை தயாரிக்கும் பேனல்களை அமைக்கும் வீடுகளில், மின் உற்பத்தி தொடர்பாக, மின்வாரிய அலுவலர்கள் வாயிலாக கணக்கிடப்படும். அதில், அவர்களது வீட்டிற்கு உபயோகப்படுத்தப்பட்ட மின்சார யூனிட்டுகளை கழித்து, உபரி மின்சாரம் மின்துறையில் பதிவேற்றம் செய்யப்படும்.

பருவமழை காலங்களில் சோலார் மின் உற்பத்தி குறையும்போது, மற்ற மாதங்களில் உபரியாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் அவர்களது வீட்டிற்கான மின்சார கட்டண 'பில்'லில் கழித்து கொள்ளப்படும்.

இதன் வாயிலாக மக்கள் தங்கள் மின் கட்டணத்தை சேமித்து கொள்ள முடிகிறது. இவ்வாறு, வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியமும் வழங்குகிறது.

ஒரு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட பேனல் அமைக்க, 30 ஆயிரம் ரூபாய், 2 கிலோ வாட் பேனல் அமைக்க, 60 ஆயிரம் ரூபாய், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேலான அலகுக்கு, 78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற, 7 முதல் 30 நாட்களுக்குள் மானிய தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அவ்வகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பலரும், தங்களது கட்டடங்களில் சோலார் பேனல் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது, மாநில அரசு, 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குகிறது. பொள்ளாச்சி மின்வாரிய கோட்டத்தில், வீடுகள், பள்ளிகள், வணிக நிறுவன கட்டடங்களில், சோலார் இணைப்பு வழங்கும் பணியை துரிதப்படுத்தி வருகிறது.

மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

வீடுகள் மற்றும் தொழில்நிறுவனங்களில், சோலார் பேனல்கள் அமைக்க உரிமையாளர்கள், இணைதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு, சோலார் பேனல் அமைக்க ஏற்ற வகையிலான வீடாக இருக்க வேண்டும். சோலார் பேனல் அமைக்கும் நிறுவனங்களை நுகர்வோர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

அதன்படி, பொள்ளாச்சி மின்வாரிய கோட்டத்தில், 17 தொழிற்சாலைகள், 435 வீடுகள், 60 உணவகங்கள், 8 தனியார் கல்வி நிறுவனங்கள், 5 மற்றவை என, மொத்தம், 525 சர்வீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தவிர, சூரிய சக்தி வீடு இலவச மின்சார திட்டத்தை கிராம புறங்களில் ஊக்குவிக்கும் பொருட்டு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், பகலில் உற்பத்தியாகும் மின் ஆற்றலில் பயனாளர்கள் பயன்படுத்தியது போக, மீதமாகும் மின்னாற்றல் மின்வாரியத்துக்கு செல்லும். இரவு நேர பயன்பாட்டிற்கு மின் இணைப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

மின் வாரியத்துக்கு ஒப்படைக்கும் மின் யூனிட், மின்வாரியத்தில் இருந்து பெறும் மின் யூனிட் கணக்கிடப்பட்டு, மின்கட்டணம் வசூலிக்கப்படும். இதனால், பயனாளிகளுக்கு மின்கட்டணம் சேமிக்கப்படுவதுடன், சூரிய மின் சக்தி மாற்று மின்னாற்றலாக பயன்படுத்தப்படும்.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us