Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'நீட்' பயிற்சி மையம் வசூலித்த கட்டணம் திருப்பி தர உத்தரவு

'நீட்' பயிற்சி மையம் வசூலித்த கட்டணம் திருப்பி தர உத்தரவு

'நீட்' பயிற்சி மையம் வசூலித்த கட்டணம் திருப்பி தர உத்தரவு

'நீட்' பயிற்சி மையம் வசூலித்த கட்டணம் திருப்பி தர உத்தரவு

ADDED : மே 29, 2025 11:57 PM


Google News
கோவை; கோவை, இடையர்பாளையம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் கதிர், 'நீட்' தேர்வெழுத விண்ணப்பித்து இருந்தார். இதற்காக துடியலுார் ரோடு வெள்ளக்கிணறு பகுதியிலுள்ள, வேலம்மாள் போதி கேம்பஸ் 'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார். பயிற்சி கட்டணம், 70,000 ரூபாய் செலுத்தினார்.

மாணவர்கள் பயிற்சியில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் விலக விரும்பினால், கட்டணம் முழுவதும் திரும்ப தரப்படும் என்று பயிற்சி மையத்தினர் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் கதிருக்கு, மற்றொரு கல்லுாரியில் இடம் கிடைத்ததால் 'நீட்' பயிற்சி மையத்திலிருந்து விலக முடிவு செய்து முறைப்படி தகவல் அளித்தார். கட்டணத்தை திரும்ப தருமாறு கடிதம் எழுதி கொடுத்தார். ஆனால், பயிற்சி நிறுவனம் பாதி தொகைக்கான காசோலை கொடுத்தனர். அதை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. பயிற்சிக்கு செலுத்திய முழு தொகையும் திரும்ப தருமாறு மீண்டும் கேட்ட போது மறுத்து விட்டனர்.

பணத்தை திரும்ப வழங்க கோரி, மாணவனின் தந்தை வெள்ளைச்சாமி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ''நீட் பயிற்சி நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் செலுத்திய 70,000 ரூபாயை திரும்ப வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us