/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளிகள் திறப்பு: 3ம் பருவ புத்தகங்கள் வினியோகம்பள்ளிகள் திறப்பு: 3ம் பருவ புத்தகங்கள் வினியோகம்
பள்ளிகள் திறப்பு: 3ம் பருவ புத்தகங்கள் வினியோகம்
பள்ளிகள் திறப்பு: 3ம் பருவ புத்தகங்கள் வினியோகம்
பள்ளிகள் திறப்பு: 3ம் பருவ புத்தகங்கள் வினியோகம்
ADDED : ஜன 02, 2024 11:35 PM
- நிருபர் குழு -
அரையாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்ததையடுத்து, பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று துவங்கியது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு, கடந்த மாதம், 21ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை விடுமுறை விடப்பட்டது.
பள்ளிகள் திறப்புக்கு முன், பொள்ளாச்சி கல்வி மாவட்ட புத்தக இருப்பு மையமான, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு வாகனங்கள் வாயிலாக அனுப்பப்பட்டன.
விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. நேற்று, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் துவங்கப்பட்டன. பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கணேசன், மூன்றாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை, மாணவர்களுக்கு வழங்கினார்.பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி, பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன் ஆகியோர் புத்தகங்களை வழங்கினர்.
வால்பாறை
வால்பாறையில், துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நேற்று நோட்டு, மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன.
வால்பாறை அடுத்துள்ள நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரஞ்சித்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை ஒன்றியத்தில் உள்ள, 85 துவக்கபள்ளிகள், 15 நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும்,1,745 மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன,' என்றனர்.
உடுமலை
உடுமலை சுற்றுப்பகுதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் நேற்று துவங்கியது. மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சாவித்ரி மாணவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வினியோகித்தார்.
தொடர்ந்து மாணவர்கள் பள்ளியில் உள்ள அனைத்து பொருட்களையும் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு பள்ளி பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான சீருடைகளை வழங்கினார்.
ஆண்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் லட்சுமிநாகசந்திரிகா மற்றும் ஆசிரியர் வள்ளியம்மாள் மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகளை வழங்கினர். மாணவர்களுக்கு கல்வியாண்டின் இறுதி பருவத்தில் இருப்பதால், அடிப்படை கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.