Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் ஒரு நாள் சுற்றுலா திட்டம்; கோவில்களை சுற்றி பார்க்க வாய்ப்பு

கோவையில் ஒரு நாள் சுற்றுலா திட்டம்; கோவில்களை சுற்றி பார்க்க வாய்ப்பு

கோவையில் ஒரு நாள் சுற்றுலா திட்டம்; கோவில்களை சுற்றி பார்க்க வாய்ப்பு

கோவையில் ஒரு நாள் சுற்றுலா திட்டம்; கோவில்களை சுற்றி பார்க்க வாய்ப்பு

ADDED : செப் 04, 2025 10:57 PM


Google News
பொள்ளாச்சி; கோவையில் உள்ள சுற்றுலா தலங்களை ஒருங்கிணைத்து, ஒரு நாள் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் பலதரப்பட்ட வளமான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களை கொண்டுள்ளது. இவற்றை கண்டு களிக்க வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

அவ்வகையில், கோவை மாவட்டத்தில், சுற்றுலாவை மேம்படுத்த, மக்கள் அதிகம் அறிந்திடாத சுற்றுலா தலங்களை கண்டறிந்து, அவற்றை பிரபலப்படுத்த, சுற்றுலா துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தற்போது, கோவையில் உள்ள சுற்றுத் தலங்களை ஒருங்கிணைத்து, ஒரு நாள் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.வாரத்தில் ஞாயிறு தோறும், கோவை தமிழ்நாடு ஓட்டலில் இருந்து புறப்படும், 21 சீட் கொண்ட 'ஏசி' கோட்ச் பஸ், மருதமலை, கோவை குற்றாலம், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலை சென்றடையும்.

இதற்காக, ஒருவருக்கு, 1,100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 10, அதிகபட்சம் 20 பேர் வரை பதிவு செய்தால் மட்டுமே பஸ் இயக்கப்படும்.

இது குறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி கூறுகையில், ''கோவையில், ஒரு நாள் சுற்றுலா திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 10 முதல் 20 பேர் பயணிக்கும் 'ஏசி' பஸ்சில், சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடனிருப்பார். அவர் வாயிலாக, சுற்றுலாப் பயணியர் ஒருங்கிணைக்கப்படுவர்.

''தற்போதைய சூழலில், ஞாயிறு தினத்தன்று மட்டுமே இந்த பஸ் இயக்கப்படுகிறது. வரும் நாட்களில், சுற்றுலாப்பயணியரின் எண்ணிக்கை அதிகரித்தால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என, இரு தினங்கள், பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us