/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசின் வண்டல் மண் எடுக்கும் திட்டத்துக்கு 'அசராத' அதிகாரிகள்! மழைக்கு முன் அனுமதித்தால் மட்டுமே பயன்அரசின் வண்டல் மண் எடுக்கும் திட்டத்துக்கு 'அசராத' அதிகாரிகள்! மழைக்கு முன் அனுமதித்தால் மட்டுமே பயன்
அரசின் வண்டல் மண் எடுக்கும் திட்டத்துக்கு 'அசராத' அதிகாரிகள்! மழைக்கு முன் அனுமதித்தால் மட்டுமே பயன்
அரசின் வண்டல் மண் எடுக்கும் திட்டத்துக்கு 'அசராத' அதிகாரிகள்! மழைக்கு முன் அனுமதித்தால் மட்டுமே பயன்
அரசின் வண்டல் மண் எடுக்கும் திட்டத்துக்கு 'அசராத' அதிகாரிகள்! மழைக்கு முன் அனுமதித்தால் மட்டுமே பயன்
ADDED : ஜூன் 27, 2024 09:45 PM
உடுமலை : குளம், குட்டைகள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு உத்தரவிட்டும், நடைமுறைக்கு வராததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
அணைகள் மற்றும் குளம், குட்டைகளில் நீர் தேங்கும் திறனை அதிகரிக்கவும், விளைநிலங்களை வளமாக்கவும், விவசாயிகள், வண்டல் மண், கிராவல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டம், கடந்த, 2017 முதல் நடைமுறையில் உள்ளது. ஆண்டு தோறும் பருவ மழைக்கு முன் அனுமதியளிக்கப்படும்.
கடந்தாண்டு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கும் வகையில், விதிமுறை இருந்தது.
நடப்பாண்டு, விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்க, சிறு கனிம விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, எளிய முறையில், தாலுகா அளவிலேயே அனுமதி வழங்கப்படும்.
மண் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்தால் போதும். தாலுகாவில், எந்த நீர்நிலைகளிலும், விவசாயிகள் மண் எடுத்துக்கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டது.
கடந்த, 12ம் தேதி இதற்காக அறிவிப்பு தமிழக முதல்வரால் வெளியிடப்பட்டு, சிறு கனிம விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, அன்றே அரசு ஆணையும் வெளியிடப்பட்டது.
ஆனால், அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், திட்டத்தை செயல்படுத்துவது இழுபறியாகி வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளம், குட்டைகள் மற்றும் அவற்றில் தேங்கியுள்ள வண்டல், களி மண் அளவு குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை வழங்க வேண்டும்.
அதே போல், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அணைகள் மற்றும் குளங்களில் தேங்கியுள்ள மண், எடுக்க வேண்டிய கனமீட்டர் மண் அளவு மற்றும் எடுக்க வேண்டிய பகுதி குறித்த அறிக்கை அளிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் சார்பில், அதற்காக மாவட்ட அரசிதழ் வெளியிடப்பட வேண்டும். அதே போல், இணைய வழியில் விண்ணப்பிக்க, உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
ஆனால், அரசு அறிவித்து, மூன்று வாரமாகியும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. பருவ மழைக்கு முன், நீர் நிலைகள் துார்வாரினால் மட்டுமே, கூடுதல் நீர் சேமிக்க முடியும் என்ற நிலையில், அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
நீர் நிலைகளை துார்வாரும் வகையில், விவசாயிகள் மண் எடுத்துக்கொள்ளும் அனுமதி வழங்குவது எளிமைப்படுத்தப்படுவதாக அறிவித்தாலும், ஆரம்ப கட்ட பணிகள் கூட துவங்கவில்லை. ரசாயன உரங்கள் பயன்பாடு காரணமாக, மண் தரம் குறைந்துள்ள நிலையில், திருமூர்த்தி அணை, அமராவதி அணை, ஏழு குளங்கள் உட்பட ஒரு சில குளங்களின் மண் எடுத்து, விளை நிலங்களுக்கு பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.
அதே போல், கிராவல் விளை நிலங்களில், வரப்பு, தடம் அமைக்க பயனுள்ளதாக இருக்கும். தற்போது பருவ மழை துவங்கினாலும், தீவிரமடையவில்லை. விரைவில் அனுமதி வழங்கினால் மட்டுமே, திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
மழை துவங்கிய பிறகு, நடைமுறைக்கு வந்தால், மண் எடுக்க முடியாமல், இத்திட்டமே பயனில்லாமல் போய் விடும்.
எனவே, மாவட்ட நிர்வாகம், அரசு துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, அணை, குளங்களின் பட்டியல், எடுக்க அனுமதிக்கப்படும் மண் அளவு குறித்து அறிவிப்பு வெளியிடுவதோடு, ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.
தாமதம் இல்லாமல், விண்ணப்பங்களை பரிசீலித்து அனுமதி வழங்கவும் வேண்டும். அதே போல், வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தாமல், விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் கண்காணிக்கவும் வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.