Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய இயற்கையே உகந்தது! அறிவுறுத்தும் தோட்டக்கலைத்துறை

நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய இயற்கையே உகந்தது! அறிவுறுத்தும் தோட்டக்கலைத்துறை

நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய இயற்கையே உகந்தது! அறிவுறுத்தும் தோட்டக்கலைத்துறை

நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய இயற்கையே உகந்தது! அறிவுறுத்தும் தோட்டக்கலைத்துறை

ADDED : செப் 10, 2025 09:51 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; நச்சுத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்கள், உயிர் உயிரிகளை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டுமென, விவசாயிகளை தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில், விவசாய நிலங்களில் அதிகளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால், உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் நச்சுத்தன்மை ஏற்பட்டு பலவிதமான நோய்கள் உண்டாக காரணமாக அமைகிறது.

மேலும், உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் நச்சுச்தன்மை அதிகமாக இருப்பதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

சமீபத்தில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு வரும் காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்களை, அம்மாநில சுகாதாரத்துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தினர். நச்சுத்தன்மை அதிகமுள்ள உணவுபொருட்களை நிராகரித்தனர். இதனால், தமிழக விவசாயிகள் பாதிப்புக்குள்ளாயினர்.

இதற்கு மாற்றாக இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உயிரிகளை பயன்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் உணவுப்பொருட்களில் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது. இது போன்ற,

இன்னல்களை தவிர்க்க தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இயற்கை உரங்கள், உயிர் உயிரிகளின் முக்கியத்துவத்தை விவசாயிகள் அறியும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பயிர்களுக்கு தேவையான இயற்கை உரங்களான தொழு உரம், பசுந்தாள் உரங்கள், மக்கிய உரங்கள், சாம்பல்கள் மற்றும் மண் வகைகளான வண்டல் மண், ஊர் உவர் மண் வழியாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து கிடைக்கிறது.

இவ்வகை இயற்கை உரங்களால் மண்ணின் வளம், நீர்ப்பிடிப்புத்தன்மை மற்றும் காற்றோட்டம் அதிகரித்து உரச்சத்து பிடிப்புத்தன்மை உயர்கிறது. மண் அரிமானம் தடுக்கப்படுகிறது.

பயிர்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் நுண்ணுாட்டச் சத்துக்களும், பயிர் ஊக்கிகளும் கிடைக்கின்றன. மேலும், மண்ணில் பயிர்களை பாதிக்கும் நுாற்புழுக்கள் பரவாமல் தடுக்கின்றது.

உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பூஞ்சானம் பயன்படுத்துவதால் ரசாயன உரங்களின் அளவை கட்டுப்படுத்தி, மண் வளத்தை பெருக்கி விவசாயிகளின் இடு பொருட்கள் செலவும் குறைகிறது.

தற்போது, நிலவும் காலநிலையில் பூச்சி மற்றும் நோய்கள் அதிகளவில் காணப்படுவதால், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு அதிகரித்து, உற்பத்தி செய்து விளைவிக்கும் பொருட்கள் தரமற்றதாகி வருகின்றது.

இது போன்ற காலநிலையில், பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை உயிர் கொல்லிகளான என்கார்சியா, அபர்டோகிரைசா, பொறிவண்டு மற்றும் மஞ்சள் ஒட்டுப்பொறி, பூச்சிகளை கவர்ந்திழுக்கும் ஊடுபயிர்களான செண்டு மல்லி, கனகாம்பரம், வரப்பு பயிர்களான ஆமணக்கு, தட்டை பயிறு, மக்காச்சோளம் போன்றவைகளை சாகுபடி செய்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

மேலும், ரசாயன உரங்கள், மருந்துகள் பயன்படுத்தும் போது தோட்டக்கலைத்துறை அலுவலர்களின் அறிவுரைகளை பெற்றும், தமிழக அரசின் திட்டங்களை பெற்று, நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து மக்களின் நலனில் அக்கறை கொள்ளும் விவசாயிகளை வரவேற்கிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us