Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சம்பள உயர்வில் பாகுபாடு பார்ப்பதாக கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேதனை

சம்பள உயர்வில் பாகுபாடு பார்ப்பதாக கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேதனை

சம்பள உயர்வில் பாகுபாடு பார்ப்பதாக கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேதனை

சம்பள உயர்வில் பாகுபாடு பார்ப்பதாக கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேதனை

ADDED : ஜூன் 30, 2025 11:07 PM


Google News
கோவை; ஒப்பந்த துாய்மை பணியாளருக்கு சம்பள உயர்வு வழங்கிய அதேசமயம், 'ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு' என, மாநகராட்சி பாகுபாடு பார்ப்பதாக, டி.பி.சி., பணியாளர்கள்(கொசு ஒழிப்பு) புலம்புகின்றனர்.

கோவை மாநகராட்சியில், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர், 910 கொசு ஒழிப்பு(டி.பி.சி.,) பணியாளர், 500க்கும் மேற்பட்ட டிரைவர், கிளீனர்கள் உள்ளனர். இவர்கள் மக்களின் அன்றாட சுகாதாரத்தினை, பேணிக்காத்து வருகின்றனர்.

கொரோனா, சுனாமி போன்ற பேரிடர் சமயங்களில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது முன்கள பணியாளர்களாக இருந்தனர். இச்சூழலில், பணி நிரந்தரம் எதிர்பார்ப்பில் இருந்த துாய்மை பணியாளர்களுக்கு குப்பை மேலாண்மையானது, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இவர்கள் தினக்கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், மாவட்ட கலெக்டர் நிர்ணயித்த ரூ.770 தினக்கூலி கோரிவருகின்றனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகமோ ரூ.680 வழங்க முடியுமென கூறிவருகிறது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பாகுபாடு பார்ப்பதாக, டி.பி.சி., பணியாளர் குமுறுகின்றனர்.

கோவை மாவட்ட பாரதிய மஸ்துார் சங்க பொது செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறியதாவது:

ஒப்பந்த துாய்மை பணியாளர் வேலை நிறுத்த போராட்டத்தின் விளைவாக, பழைய சம்பளத்திலிருந்து ரூ. 1,250 உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், கொசு ஒழிப்பு பணியுடன், வீடு, வீடாக வரிவசூல், துாய்மை பணியை கண்காணித்தல் பணிகளில் ஈடுபடும் டி.பி.சி., பணியாளர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

தொழிலாளர் மத்தியில் இது மிகுந்த வேதனை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உடனான பேச்சுவார்த்தையின்போது, டி.பி.சி., பணியாளர்களுக்கு ஒன்றரை மாதத்திற்குள் சம்பளம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதை விரைந்து வழங்குமாறு மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

எவ்வளவு சம்பளம்?

ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, தற்போது இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் போக ரூ.16 ஆயிரம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், பல பணிகள் செய்யும் டி.பி.சி., பணியாளர்களுக்கு பிடித்தம் போக ரூ.14 ஆயிரத்து, 580 மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்களும் சம்பள உயர்வை எதிர்பார்த்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us