Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விஸ்வரூபம் எடுத்தது கனிம வள விவகாரம்; காத்திருப்போர் பட்டியலுக்கு ஆர்.டி.ஓ. மாற்றம்

விஸ்வரூபம் எடுத்தது கனிம வள விவகாரம்; காத்திருப்போர் பட்டியலுக்கு ஆர்.டி.ஓ. மாற்றம்

விஸ்வரூபம் எடுத்தது கனிம வள விவகாரம்; காத்திருப்போர் பட்டியலுக்கு ஆர்.டி.ஓ. மாற்றம்

விஸ்வரூபம் எடுத்தது கனிம வள விவகாரம்; காத்திருப்போர் பட்டியலுக்கு ஆர்.டி.ஓ. மாற்றம்

ADDED : செப் 11, 2025 09:59 PM


Google News
கோவை; கனிம வள கொள்ளை விவகாரத்தில், கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்காமல் இருந்த, தெற்கு ஆர்.டி.ஓ., ராம்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

கோவை தெற்கு கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.,) ராம்குமார், ஓராண்டாக இருந்தார். சூலுார், மதுக்கரை, பேரூர், கோவை தெற்கு ஆகிய தாலுகாக்கள் தெற்கு கோட்டத்துக்கு உட்பட்டவை. பேரூர் தாலுகா பகுதிகளில் தனியார் மற்றும் வருவாய்த்துறை நிலங்களில் அனுமதியின்றி அதிக அளவு மண்வெட்டி எடுக்கப்பட்டது. பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு, வனவிலங்குகள் விழுந்து தவித்தன. சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டது.

மண் வெட்டி எடுத்த இடங்கள் அளவீடு செய்து சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு கோர்ட் உத்தரவுப்படி அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோவை தெற்கு ஆர்.டி.ஓ.,விடம் முறையீடு செய்தனர். அதை ஏற்க மறுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கலெக்டர் பரிசீலித்து, கனிம வளத்துறையினருடன் ஆலோசித்து, மறுஅளவீடு செய்து பெரும்பாலான விவசாயிகளுக்கு அபராதத்தை குறைத்தார். தற்போதும் அளவீட்டு பணி நடக்கிறது. இப்பிரச்னையால் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இத்தகவல் உளவுப்பிரிவு வாயிலாக அரசுக்கு சென்றது. இதையடுத்து. ஆர்.டி.ஓ., ராம்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, சேலம் பயிற்சி துணை கலெக்டராக இருந்த மாருதி பிரியா நியமிக்கப்பட்டு உள்ளார்.

கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி கூறுகையில், ''கோட்ட அளவிலான விவசாயிகள் கூட்டம் பலமுறை அறிவித்து, நடைபெறாமல் போனது. விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தோம். கனிம வள விவகாரம் மட்டுமல்ல; எந்த பிரச்னையிலும் விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு அவரிடம் இல்லை,'' என்றார்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரங்கநாதன் கூறுகையில், ''சூலுார் அருகம்பாளையத்தில் நொய்யலை ஆக்கிரமித்து வண்டிப்பாதையை சிலர் அமைத்துள்ளனர். வேடபட்டி கீழ் சித்திரைச்சாவடி பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது போன்ற பிரச்னைகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்றார்.

ஆர்.டி.ஓ., ராம்குமாரிடம் கேட்டபோது, ''பணியில் இருந்த நாட்களில் மனசாட்சிபடி பணிபுரிந்தேன். கனிம வள விவகாரத்தில் கோர்ட் உத்தரவுப்படி நடந்து கொண்டேன். அளவீடு செய்யும் பணி கனிம வளத்துறை சார்ந்தது. எனது பணியை திருப்திகரமாகவும், சரியாகவும் மேற்கொண்டேன்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us