/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கேரளா செல்ல மேப் பார்த்து... முள்ளிக்கு வராதீங்க! 40 கி.மீ.,சுற்றனும் என எச்சரிக்கைகேரளா செல்ல மேப் பார்த்து... முள்ளிக்கு வராதீங்க! 40 கி.மீ.,சுற்றனும் என எச்சரிக்கை
கேரளா செல்ல மேப் பார்த்து... முள்ளிக்கு வராதீங்க! 40 கி.மீ.,சுற்றனும் என எச்சரிக்கை
கேரளா செல்ல மேப் பார்த்து... முள்ளிக்கு வராதீங்க! 40 கி.மீ.,சுற்றனும் என எச்சரிக்கை
கேரளா செல்ல மேப் பார்த்து... முள்ளிக்கு வராதீங்க! 40 கி.மீ.,சுற்றனும் என எச்சரிக்கை
ADDED : ஜூலை 15, 2024 02:30 AM

மேட்டுப்பாளையம்;கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ளது காரமடை அருகே உள்ள முள்ளி பகுதி. இவ்வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கு செக்போஸ்ட்டில் அனுமதியில்லை. இதைஅறியாமல் மேப் வாயிலாக வந்து இளைஞர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் அங்கிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள கேரளாவுக்கு செல்ல முடியாமல் 40 கி.மீ., சுற்றிச்செல்கின்றனர். மேப் செயலிகளை நம்பி இங்கு வர வேண்டாம். அனுமதி கிடையாது என வனத்துறையினர் தெரிவிக்கின் றனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முள்ளி, தமிழகம்-கேரளா எல்லைப் பகுதி ஆகும். இங்கு தமிழகம் மற்றும் கேரளா என இருமாநிலங்களின் வனத்துறை சார்பில் செக்போஸ்ட் உள்ளது. முள்ளி மிகவும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
இருமாநிலங்களிடையே முள்ளி வாயிலாக போக்குவரத்து இருந்து வந்தது. வனவிலங்குகள் பாதுகாப்பு, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த 2022ம் ஆண்டு முள்ளி செக் போஸ்ட் கோவை மாவட்ட வனத்துறையால் மூடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழியாக தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால், கேரளாவின் புதுார், தமிழகத்தின் முள்ளி, குண்டூர், பில்லுார் அணை பகுதி என உள்ளூர் கிராம மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
முள்ளி செக் போஸ்ட் மூடப்பட்டதால், கேரள மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், விவசாயிகள், வியாபாரிகள் முள்ளி வழியாக மேட்டுப்பாளையம், ஊட்டிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல், காரமடை முள்ளி வழியாக கேரளா மாநிலம் அட்டப்பாடி, கோழிக்கோடு பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தமிழக மக்களும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், இளைஞர்கள் சிலர் மேப் செயலிகள் வாயிலாக கேரளவுக்கு செல்ல முள்ளி வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் பைக், கார்களில் அதிக அளவில் இளைஞர்கள் வருகின்றனர். அவர்கள் வனத்துறையினரால் அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால் இளைஞர்கள் மீண்டும் வந்த வழியே கோபனாரி சென்று அங்கிருந்து கேரளா மாநிலம் செல்கின்றனர் அல்லது பில்லுார் வழியாக ஊட்டிக்கு சென்று அங்கிருந்து கேரளா மாநிலம் வயநாடு செல்கின்றனர். முள்ளியில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் கேரளாவுக்கு செல்ல, அனுமதி மறுப்பால் 40 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை உள்ளது.
இது குறித்து காரமடை வனத்துறையினர் கூறுகையில், ''மருத்துவம் உள்ளிட்ட மிக முக்கிய தேவைகளுக்காக முள்ளி செக்போஸ்ட்டில் உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேப் செயலிகளை நம்பி இங்கு வர வேண்டாம். அனுமதி கிடையாது,'' என்றனர்.
கேரளா அரசு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தாவளம் பகுதியில் இருந்து முள்ளி வரை ரூ.140 கோடியில் இருவழி சாலை அமைத்துள்ளது.
முள்ளி செக்போஸ்ட்டை தமிழக அரசு திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தது வருவது குறிப்பிடத்தக்கது.
---