/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மருதமலையில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம் லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்மருதமலையில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம் லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
மருதமலையில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம் லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
மருதமலையில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம் லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
மருதமலையில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம் லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
ADDED : ஜன 26, 2024 01:19 AM

வடவள்ளி;மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிர மணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூச தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்தாண்டு, தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 19ம் தேதி முதல் நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, திருவீதி உலா நடந்தது.
நேற்று முன்தினம், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, தைப்பூச திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடந்தது. இந்நிலையில், தைப்பூச திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று, அதிகாலை, 3:00 மணிக்கு கோபூஜையும், 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அதிகாலை, 4:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய் வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து, திருத்தேரில் எழுந்தருளினர். பகல், 12:15 மணிக்கு, லட்சக்கணக்கான பக்தர்களின், அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் நடந்தது. தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு முதலே, லட்சக்கணக்கான பக்தர்கள், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று, அதிகாலை முதலே மருதமலை முழுவதும் பக்தர்கள் நிறைந்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில், 500 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


