/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குறிச்சி பிரிவு - போத்தனுார் சந்திப்பு வரை... ஒரே ஒரு ரோடு... பல வித முறைகேடு! விரிவாக்கம் முடியும் முன்னே சீரமைப்பு!குறிச்சி பிரிவு - போத்தனுார் சந்திப்பு வரை... ஒரே ஒரு ரோடு... பல வித முறைகேடு! விரிவாக்கம் முடியும் முன்னே சீரமைப்பு!
குறிச்சி பிரிவு - போத்தனுார் சந்திப்பு வரை... ஒரே ஒரு ரோடு... பல வித முறைகேடு! விரிவாக்கம் முடியும் முன்னே சீரமைப்பு!
குறிச்சி பிரிவு - போத்தனுார் சந்திப்பு வரை... ஒரே ஒரு ரோடு... பல வித முறைகேடு! விரிவாக்கம் முடியும் முன்னே சீரமைப்பு!
குறிச்சி பிரிவு - போத்தனுார் சந்திப்பு வரை... ஒரே ஒரு ரோடு... பல வித முறைகேடு! விரிவாக்கம் முடியும் முன்னே சீரமைப்பு!
ADDED : ஜூன் 12, 2024 02:35 AM

-நமது நிருபர்-
கோவையில் ரூ.13 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படும் ரோட்டில், பணி முடிவதற்கு முன்பே, ரூ.81 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது, நெடுஞ்சாலைத்துறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு சான்றாகவுள்ளது.
கோவையில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது துவங்கிய பாதாள சாக்கடைத் திட்டம், புதிய குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக, நகரம் முழுவதும் உள்ள ரோடுகள் தோண்டப்பட்டன.
அவை நீண்ட காலமாக சரி செய்யப்படாமலிருந்தன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, 2022ல் 16 ரோடுகளை சீரமைக்க ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டது.
அவற்றில் ரூ.12 கோடியே 99 லட்சம் மதிப்பில், குறிச்சி பிரிவு-போத்தனுார் சந்திப்பு வரை 2.6 கி.மீ., ரோட்டை, இரு வழிப்பாதையிலிருந்து சென்டர் மீடியனுடன் கூடிய நான்கு வழிப்பாதையாக மேம்படுத்துவதும் ஒரு பணியாகும். அப்போது துவங்கிய பணி, இன்று வரை முழுமையாக முடிவடையவில்லை; அதற்கான நிறைவுச்சான்று (completion certificate) இன்னும் வழங்கப்படவில்லை.
வழக்கமாக, ஒரு ஒப்பந்தப்பணிக்கான தொகையில், ஐந்து சதவீதத் தொகை, நிறுத்தி வைக்கப்பட்டு, நிறைவுச் சான்று கொடுத்த பின், இரண்டரை சதவீதத் தொகையும், பணி முடிந்து ஆறு மாதங்களுக்குப் பின், இறுதிப்பட்டியல் செய்து மீதித் தொகையும் விடுவிக்கப்படும். இந்த ரோடுக்கு இன்னும் நிறைவுச் சான்று, இறுதிப்பட்டியல் இரண்டுமே தரப்படவில்லை.
ஆனால் அதற்குள் இந்த ரோட்டில் சீரமைப்புப் பணி மேற்கொள்வதாகக் கூறி, மொத்த துாரமும், ஆறு பிரிவுகளாக (ரீச்) பிரிக்கப்பட்டு, மொத்தம் ரூ.80.86 லட்சம் மதிப்பில் சீரமைப்பு மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த பிப்.,14 அன்று முன் தேதியிட்டு வெளியிடப்பட்ட மூன்று டெண்டர் நோட்டீஸ்களில், நோட்டீஸ் எண்:53 ல், இந்த ஆறு பணிகளும் (எண்:26-31) இடம் பெற்றுள்ளன.
ரூ.15 லட்சம் மதிப்புக்குட்பட்ட பணிகள் என்றால், கோட்டப் பொறியாளரே டெண்டரை முடிவு செய்யலாம் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தப் பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. அதாவது, விரிவாக்கப் பணி முடிந்து ஒப்படைக்காத ரோட்டைப் புதுப்பிக்க, ரூ.81 லட்சத்துக்கு டெண்டர் விட்டிருப்பதில், பல விதமான விதிமீறல்கள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ரூ.13 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படும் பணியே முறைப்படி முடியாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குள் அதே ரோட்டைச் சீரமைப்பதாகக் கூறி, டெண்டர் விட்டிருப்பதே, நெடுஞ்சாலைத் துறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு 'ஒரு சோறு பதம் போல' அமைந்துள்ளது. ஆனால் இந்த ரோட்டில் சீரமைப்புப் பணிக்கு, டெண்டர் விடவேயில்லை என்று அதிகாரிகள் மறுப்பது விநோதமாகவுள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறையின் கோவை கோட்டப் பொறியாளர் பிரசன்ன வெங்கடேஷ் கூறுகையில், ''விரிவாக்கம் செய்யப்படும் குறிச்சி பிரிவு-போத்தனுார் சந்திப்பு வரையிலான 2.6 கி.மீ., ரோட்டைச் சீரமைக்க, டெண்டர் விடவில்லை. இது 1.6 கி.மீ., துாரமுள்ள போத்தனுார் சந்திப்பு ரோடாகும். அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை,'' என்றார்.
எந்த ரோட்டில் என்ன வேலை நடக்கிறது என்பதே தெரியாமல், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இருப்பது கோவைக்கான சாபக்கேடு!