Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நினைத்தாலே 'உவ்வே!'

நினைத்தாலே 'உவ்வே!'

நினைத்தாலே 'உவ்வே!'

நினைத்தாலே 'உவ்வே!'

ADDED : மார் 22, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
குப்பை கிடங்கு அருகே காய்கறி மார்க்கெட்

அரசுக்கு கருத்துரு அனுப்பியது மாநகராட்சி

கோவை, மார்ச் 23-

வெள்ளலுார் குப்பை கிடங்கு அருகே உள்ள, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், 130 கடைகளுடன் மொத்த காய்கறி மார்க்கெட் மற்றும் கனரக வாகன முன்பதிவு அலுவலகங்கள் கொண்டு வர, மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

கோவை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில், 150 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்படுகிறது. மலைக்குன்று போல் குப்பை தேங்கியுள்ளது. பழைய குப்பையை அழிக்க, 'பயோமைனிங்' திட்டம் துவக்கப்பட்டிருக்கிறது.

இனி வரும் குப்பையை அழிக்க, 'பயோ காஸ்' மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

மக்கள் அவதியோ அவதி


இதே வளாகத்தில், பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், தெருநாய் கருத்தடை சிகிச்சை மையம் கட்டப்பட்டு உள்ளன. குப்பையால், நிலத்தடி நீர் மாசடைந்து, மஞ்சள் நிறத்தில் வருகிறது; காற்று மாசு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதன் அருகாமையில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை கைவிட்டு விட்டு, அவ்வளாகத்தில் காய்கறி, பழ மார்க்கெட் மற்றும் லாரிப்பேட்டையாக மாற்றுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டு, கடந்தாண்டு டிச., மாதம் தீர்மானம் கொண்டு வந்தது; பெரும்பாலான கவுன்சிலர்கள் ஏற்கவில்லை.

கருத்து கேட்பு கூட்டம்


இதையடுத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. காய்கறி, பழக்கடை வியாபாரிகள் மற்றும் லாரிப்பேட்டையை கொண்டு செல்வதற்கு, வியாபாரிகள் ஒப்புதல் அளிக்கவில்லை. கோயம்புத்துார் மோட்டார் டிரான்ஸ்போர்ட் கவுன்சில் என்கிற சங்கத்தினரிடம் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதையும் கேட்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் கடிதம் பெற்றிருக்கின்றனர்.

இதையடுத்து, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தைச் சேர்த்து, 240 கடைகள் உருவாக்கி, கனரக வாகன பதிவு அலுவலகங்களுக்கு ஒதுக்கவும், தரைத்தளத்தில், 130 கடைகளுடன் மொத்த காய்கறி மார்க்கெட் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இவ்வளாகத்தில் கழிப்பிடம், குளியலறை, ஓய்வறை, உணவு விடுதிகள், சுகாதார நிலையங்கள், மருந்து கடைகள், லாரி எடை மேடை, சரக்குகள் ஏற்றி இறக்கி வைக்க குடோன்கள், வாகன புகை பரிசோதனை நிலையம், பெட்ரோல் பங்க் அமைக்க இடம், புறக்காவல் நிலையம் அமைக்க ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

எதிர்ப்பு கட்டாயம் வரும்


மாமன்ற கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வந்தால், கவுன்சிலர்களிடம் எதிர்ப்பு வரும் என்பதால், மேயரிடம் முன்அனுமதி பெற்று, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 28ல் நடைபெறும் மாமன்ற கூட்டத்தில், பின்னேற்பு கேட்டு, தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

குப்பை கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தையே, தாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மொத்த காய்கறி மார்க்கெட் வந்தால், காய்கறி கழிவுகளால் துர்நாற்றம் மட்டுமின்றி, ஈத்தொல்லையும் அதிகமாகும்.

மாநகராட்சியின் திட்டத்தை அறிந்த, வெள்ளலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எதிர்த்து போராட தயாராகி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us