Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தொழில்துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கூட்டுக்கமிட்டி! மத்தியில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசிடம் எதிர்பார்ப்பு

தொழில்துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கூட்டுக்கமிட்டி! மத்தியில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசிடம் எதிர்பார்ப்பு

தொழில்துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கூட்டுக்கமிட்டி! மத்தியில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசிடம் எதிர்பார்ப்பு

தொழில்துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கூட்டுக்கமிட்டி! மத்தியில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசிடம் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 14, 2024 04:47 AM


Google News
Latest Tamil News
கோவை : தொழில்துறையினருக்கான தேவைகள் மற்றும் பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண, துறை சார்ந்த அமைச்சர்கள், எம்.பி.,க்கள், அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்கமிட்டி அமைத்து, மூன்று மாதத்துக்கு ஒரு முறை விவாதித்து, தீர்வு காண வேண்டு மென்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமாக கோவை வளர்ந்து வருகிறது. பஞ்சாலைகள் அதிகமாக இருந்த இம்மாவட்டத்தில், தற்போது பல்வகை தொழில்கள் பெருகி விட்டன. வெளிமாநிலங்களைச் சேர்ந்த எண்ணற்ற நிறுவனங்கள், தொழில் துவங்க கோவையை நோக்கி வருகின்றன. அதற்கேற்ப தொழில்பேட்டைகள் உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஜவுளித்துறைக்கு ஏற்ப தகவல் தொழில்நுட்பத்துறையும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

தொழில் வளர்ச்சிக்கேற்ற கட்டமைப்பு வசதிகளை, மத்திய - மாநில அரசுகள் இணைந்து செய்து கொடுக்கும் பட்சத்தில், பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாவதற்கு வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

அதற்கு போட்டி நாடுகளை சமாளிக்கவும், உற்பத்தி செலவினங்களை குறைக்கவும், மூலப்பொருட்களை சரியான நேரத்துக்கு நியாயமான விலைக்கு தருவிக்க வேண்டிய நெருக்கடி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுகிறது. மற்ற நாடுகள் மற்றும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிகையில், தமிழகத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு தருவிக்கப்படும் மூலப்பொருட்களுக்கான விலை அதிகபட்சமாக இருப்பதால், தயாரிப்பு பொருட்களின் சந்தை மதிப்பு அதிகரிக்கிறது; இதன் காரணமாக, போட்டி நாடுகளை எதிர்கொள்ள முடியாமல் தொழில் துறையினர் தடுமாறுகின்றனர்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, மத்தியில் பொறுப்பேற்றுள்ள, பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு, தொழில் சார்ந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டுக்கமிட்டி ஏற்படுத்த வேண்டுமென தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

அலசி ஆராய வேண்டும்


இதுதொடர்பாக, தொழில்துறையினர் கூறியதாவது: மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூட்டுக்கமிட்டி கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதில், நாடு தழுவிய அளவில் ஒவ்வொரு தொழில்துறைக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், தேவைகளை அலசி ஆராய வேண்டும்.

தொழில்துறையினரின் தேவையை உணர்ந்து, அதற்கான தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும். எதிர்பார்க்கும் உதவிகளை நேரடியாகவோ அல்லது மாநில அரசு மூலமாகவோ தொழில்துறையினரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜவுளித்துறையில் உள்ள பெரு நிறுவனங்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவையை கேட்டறிவது மிக முக்கியம்.

ஏனெனில், மத்திய - மாநில அரசுகள் தொழில் கொள்கைகள் உருவாக்கும்போது, அனைத்து தொழில்துறையினரிடம் சாதக - பாதகங்களை கேட்டறிய வேண்டும். அவ்வாறு செய்தால், மதிப்பு சங்கிலியில் இணைந்திருக்கும் அனைத்து தரப்பினரும் பயனடைய முடியும்.

வழக்கமாக, பெருநிறுவனங்களுக்கு சாதகமாக கொள்கைகள் வகுக்கப்படுவதால், நாடு முழுவதும் உள்ள, 3.64 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், இவற்றில் பணிபுரியும், 16.86 கோடி தொழிலாளர்களின் வேலைநாட்கள் குறைந்து வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகள் தொடராமல் இருக்க, தொழில்துறையினரை அங்கம் வகித்து, கூட்டுக்கமிட்டி ஏற்படுத்தி, விவாதிக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியம். இவ்வாறு, தொழில்துறையினர் கூறினர்.

உறுப்பினர்கள் யார்?

கூட்டுக் கமிட்டியில் அனைத்து தரப்பினரும் உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜவுளித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர்கள், டெக்ஸ்டைல் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் அதிகமுள்ள மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் அந்தந்த பகுதிகளைசேர்ந்த தொழில்முனைவோர்கள், தொழில் அமைப்பு நிர்வாகிகள் ஆகியோரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us