/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சர்வீஸ் ரோடு அமைக்க இடம் இருக்கிறதா? ரோட்டை அளந்த நெடுஞ்சாலைத் துறையினர்சர்வீஸ் ரோடு அமைக்க இடம் இருக்கிறதா? ரோட்டை அளந்த நெடுஞ்சாலைத் துறையினர்
சர்வீஸ் ரோடு அமைக்க இடம் இருக்கிறதா? ரோட்டை அளந்த நெடுஞ்சாலைத் துறையினர்
சர்வீஸ் ரோடு அமைக்க இடம் இருக்கிறதா? ரோட்டை அளந்த நெடுஞ்சாலைத் துறையினர்
சர்வீஸ் ரோடு அமைக்க இடம் இருக்கிறதா? ரோட்டை அளந்த நெடுஞ்சாலைத் துறையினர்
ADDED : பிப் 24, 2024 12:18 AM
கோவை;சிங்காநல்லுார் சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு முன், சர்வீஸ் ரோடு போடுவதற்கு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அளவீடு செய்துள்ளனர்.
கோவை - திருச்சி ரோட்டில், சிங்காநல்லுாரில், வரதராஜபுரம் ரோடு, ஒண்டிபுதுார் ரோடு, வெள்ளலுார் ரோடுகள் சந்திக்கின்றன.
சமீபத்தில் எடுத்த ஆய்வில், ஒரு மணி நேரத்துக்கு, 20 ஆயிரம் வாகனங்கள் கடப்பது தெரியவந்தது. அதனால், இப்பகுதியை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
இதற்கு தீர்வு காண, ஒண்டிப்புதுார் பாலம் அருகே செயின்ட் ஜோசப் பள்ளிக்கு முன் துவங்கி, சிங்காநல்லுார் சந்திப்பை கடந்து, மேற்கு மின்வாரிய அலுவலகம் முன்பு வரை, 2,400 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து, டெண்டர் கோரியுள்ளது. வரும் மார்ச் 7ல் டெண்டர் இறுதி செய்யப்படுகிறது.
இதில், 54 கண்களுடன் நான்கு வழிச்சாலையாக 1,900 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் மட்டும் அமையும். 1.5 மீட்டர் அகலத்துக்கு மழை நீர் வடிகால் கட்டப்படும்.
அணுகு சாலையை, 5.5 மீட்டர் அகலத்தில் இருந்து, 7 மீட்டராக விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தாமல் மேம்பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில், உக்கடம் - ஆத்துப்பாலம், கவுண்டம்பாளையம், துடியலுார், திருச்சி ரோடு என ஒரே நேரத்தில் மேம்பாலப் பணிகள் செய்யப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தற்போது அவிநாசி ரோட்டிலும், ஆத்துப்பாலத்திலும் மேம்பால வேலைகள் நடந்து வருகின்றன. இவ்விரு சாலைகளையும் கடந்து செல்ல, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
அதனால், 'சர்வீஸ் ரோடு' ஏற்பாடு செய்யாமல், புதிதாக எந்த மேம்பாலப் பணிகளை துவக்கக் கூடாதென, நெடுஞ்சாலைத்துறைக்கு, கலெக்டர் கிராந்திகுமார் கண்டிப்பாக கூறிவிட்டார்.
அதனால், சிங்காநல்லுாரில் பணியை துவக்குவதற்கு முன், 'சர்வீஸ்' ரோட்டை ஏற்பாடு செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
அதற்காக, தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனபால், மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி மற்றும் போக்குவரத்து போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர், சிங்காநல்லுார் சந்திப்பில் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'சிங்காநல்லுார் சந்திப்பில், 25 மீட்டர் முதல், 30 மீட்டர் வரை, ரோடு அகலமாக இருக்கிறது. மேம்பாலம் கட்டுவதற்கு மையப்பகுதியில், 16 மீட்டர் ஒதுக்கினால், 14 மீட்டர் அகலத்துக்கு ரோடு கிடைக்கும்.
இருபுறமும் தலா, 7 மீட்டர் வீதம் 'சர்வீஸ்' ரோடு ஏற்படுத்த ஒதுக்கலாம் என, நெடுஞ்சாலைத்துறையினர் ஆலோசித்துள்ளனர். ஆனால், ரோட்டோரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாத சூழல் ஏற்படும்' என்றனர்.
கடைகளுக்கு முன் வாகனங்களை நிறுத்த அனுமதிக்காவிட்டால், அப்பகுதியின் வர்த்தகம் வெகுவாக பாதிக்கும் என்பதால், மாற்று வழித்தடத்தையும் அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.