/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பழைய சிமென்ட் மூட்டைகளை பயன்படுத்துவது நல்லதா?பழைய சிமென்ட் மூட்டைகளை பயன்படுத்துவது நல்லதா?
பழைய சிமென்ட் மூட்டைகளை பயன்படுத்துவது நல்லதா?
பழைய சிமென்ட் மூட்டைகளை பயன்படுத்துவது நல்லதா?
பழைய சிமென்ட் மூட்டைகளை பயன்படுத்துவது நல்லதா?
ADDED : பிப் 10, 2024 01:03 AM

ஒரு கட்டட கட்டுமான பணியை துவங்கிவிட்டால், அதை எக்காரணத்தை முன்னிட்டும், பாதியில் நிறுத்தாதீர்கள் என்கின்றனர் பொறியாளர்கள்.
கட்டட வேலைகள் தாமதமாவதற்கு, பல காரணங்கள் ஏற்பட்டாலும், நம்மால் தவிர்க்கக்கூடிய காரணங்களும் இருக்கும்.
கட்டுமான பணிகளை பாதியில் நிறுத்தி, சில மாதங்கள் கழித்து மீண்டும் துவக்கும் போது பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழும். குறிப்பாக, இருப்பு வைக்கப்பட்ட பழைய கட்டுமான பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது, தவிர்க்க முடியாததாக உள்ளது.
இரும்பு குழாய்கள், கம்பிகள் துருப்பிடித்து இருக்கலாம். அந்த துருவுடனே பயன்படுத்தினால், அதன் தரம் குறைந்துவிடும் அபாயம் உண்டு. துருவை நீக்கி, ஒரு முறை பெயின்ட் செய்து, மீண்டும் பயன்படுத்தலாம்.
இதில் மணல், செங்கல், சிமென்ட், ஜல்லி போன்ற பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கலாம். பாதியில் பணிகள் நிறுத்தப்பட்டதால், இவை பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டு இருக்கும்.
உரிய பாதுகாப்புடன் இருக்கிறது என்பதற்காக, இப்பொருட்களை பயன்படுத்துவதில் அலட்சியமாக செயல்படுவது, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக, மணல், ஜல்லி விஷயத்தில் துாசு, குப்பைகள் சேர்ந்து இருக்கலாம். இவற்றை சில மாதங்கள் கழித்து பயன்படுத்தும் போது, மீண்டும் முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும்.
அதற்கான நேரமும், தொழிலாளரின் கூலியும் அதிகளவில் தேவைப்படும். ஆனால் அந்த குப்பைகளை நீக்காமல், அப்படியே பயன்படுத்தினால் அதன்பின் ஏற்படும் சங்கடங்களுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும்.
சிமென்ட்...பத்திரம்!
சிமென்ட் விஷயத்தில் பலரும் தவறுகள் செய்கின்றனர். கட்டுமான பணியின் தேவைக்காக, 50 மூட்டை சிமென்ட் வாங்கி இருப்பர். ஏதோ காரணத்தால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கும்.
அந்த சமயத்தில் சிமென்ட் மூட்டைகள் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கலாம். பாதியில் நிறுத்தப்பட்ட பணி, மீண்டும் துவங்கும் நிலையில் இந்த சிமென்ட் மூட்டைகளை பயன்படுத்த நினைப்பது வழக்கம்.
அப்போது சிமென்ட் மூட்டைகள் நல்ல நிலையில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். பழைய சிமென்ட் மூட்டைகள், குறிப்பிட்ட காலத்தில் சுமை தாங்கும் திறனை படிப்படியாக இழக்கும்.
அடுக்கி வைக்கும் போது ஏற்படும் அழுத்தத்தினால், சிமென்ட் கட்டியாகிவிடும் வாய்ப்புகள் அதிகம். அதனை கைகளால் தூளாக்கிய பின்பு தான், பயன்படுத்த வேண்டும்.
அதனால் தான் உற்பத்தி ஆலைகளில் இருந்து வாங்கியவுடன் விரைந்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. சிமென்ட் மூட்டைகள் கெட்டியாகாமல் இருந்தால் மீண்டும் பயன்படுத்தலாம்.
அதுவும், துாண்கள், பீம்கள், தளம் அமைப்பதில் பயன்படுத்த கூடாது. செங்கல் கட்டு வேலை, பூச்சு வேலை போன்ற இடங்களில் வேண்டுமானால், பழைய சிமென்ட் மூட்டைகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.