/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பூச்சி மேலாண்மையில் கண்ணாடி இறக்கை பூச்சி: ஆயிரம் முட்டைகளின் விலை ரூ.300பூச்சி மேலாண்மையில் கண்ணாடி இறக்கை பூச்சி: ஆயிரம் முட்டைகளின் விலை ரூ.300
பூச்சி மேலாண்மையில் கண்ணாடி இறக்கை பூச்சி: ஆயிரம் முட்டைகளின் விலை ரூ.300
பூச்சி மேலாண்மையில் கண்ணாடி இறக்கை பூச்சி: ஆயிரம் முட்டைகளின் விலை ரூ.300
பூச்சி மேலாண்மையில் கண்ணாடி இறக்கை பூச்சி: ஆயிரம் முட்டைகளின் விலை ரூ.300
ADDED : ஜன 02, 2024 11:30 PM

பொள்ளாச்சி:'கண்ணாடி இறக்கை பூச்சி வாயிலாக, பூச்சி மேலாண்மை மேற்கொள்ளலாம்,' என, தெற்கு வேளாண்துறை உதவி இயக்குனர் நாகபசுபதி தெரிவித்தார்.
பொள்ளாச்சி தெற்கு வேளாண் துறை உதவி இயக்குனர் நாகபசுபதி கூறியதாவது:
உயிரியல் முறையில் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, இரை விழுங்கும் பூச்சிகள், ஒட்டுண்ணிகள், பூச்சிகளுக்கு நோய் உண்டாக்கும் பூஞ்சானங்கள் போன்றவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையில், உயிரியல் முறை பூச்சி மேலாண்மை முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனால், சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனிதன் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
பூச்சி மருந்துகள் போல், பூச்சிகளில் எதிர்ப்புத்தன்மை உயிரியல் முறை பூச்சி மேலாண்மையில் விரைவாக ஏற்படுவதில்லை.
கண்ணாடி இறக்கை பூச்சி என்ற கிரைசோபெர்லா கார்னியா பூச்சி ஒரு இரை விழுங்கும் பூச்சி வகையாகும். இவை, அசுவினி, வெள்ளை ஈ போன்ற பயிர்களை தாக்கி தீமை செய்யும் பூச்சிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த உபயோகப்படுத்தலாம்.
இந்த கண்ணாடி இறக்கை பூச்சியின் இளம் பருவ குஞ்சுகள், அசுவினி, வெள்ளை ஈ போன்ற பூச்சிகளை இரையாக விழுங்கும் தன்மை கொண்டவையாகும். இளம் பருவ குஞ்சுகளே உயிரியல் முறை கட்டுப்பாட்டுக்கு உதவுகின்றன.
இவை, இலைப்பேன் தத்துப்பூச்சிகள், தென்னை சுருள், வெள்ளை ஈ போன்றவற்றையும் இரையாக உட்கொள்ளும் இயல்பை கொண்டுள்ளது.
இப்பூச்சிகிள் காம்பின் நுனியில் முட்டைகளை இடும் தன்மையை கொண்டது. முட்டைப்பருவம் சுமார், 3 - 4 நாட்களாகும். இதன் இளம் புழுக்கள் வளர்ச்சிக்காலம், 8 - 10 நாட்களாகும்; கூட்டுப்புழு பருவம், 5 - 7 நாட்களாகும்.
கிரைசோபெர்லா முட்டைகள், காகிதத் தாள்களில் பொதுவாக வழங்கப்படும். இந்த காகிதத்தாள்களை சிறு துண்டுகளாக்கி இந்த துண்டுகளை பயிரின் பாகங்களுடன் இணைத்து வயலில் விட வேண்டும்.
இவற்றின் முட்டைகள், பொள்ளாச்சி தெற்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் கிடைக்கிறது.
ஆயிரம் முட்டைகளின் விலை, 300 ரூபாயாகும். தேவைப்படும் விவசாயிகள், தங்களது பகுதியின் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.