/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எதிர்பார்க்கும் பருவமழை பெய்தால் சாகுபடி....இந்தாண்டு செழிக்கும்! கடந்தாண்டு இயல்பை விட குறைவால் பாதிப்புஎதிர்பார்க்கும் பருவமழை பெய்தால் சாகுபடி....இந்தாண்டு செழிக்கும்! கடந்தாண்டு இயல்பை விட குறைவால் பாதிப்பு
எதிர்பார்க்கும் பருவமழை பெய்தால் சாகுபடி....இந்தாண்டு செழிக்கும்! கடந்தாண்டு இயல்பை விட குறைவால் பாதிப்பு
எதிர்பார்க்கும் பருவமழை பெய்தால் சாகுபடி....இந்தாண்டு செழிக்கும்! கடந்தாண்டு இயல்பை விட குறைவால் பாதிப்பு
எதிர்பார்க்கும் பருவமழை பெய்தால் சாகுபடி....இந்தாண்டு செழிக்கும்! கடந்தாண்டு இயல்பை விட குறைவால் பாதிப்பு
ADDED : ஜன 02, 2024 11:37 PM
உடுமலை:உடுமலை பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், கடந்த 10
ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்தாண்டு, 110.71 மி.மீ., மழை குறைவாக
பெய்துள்ளது. பருவமழைகள் ஏமாற்றியதால், பயிர் சாகுபடி பரப்பு குறைந்தது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தென்னை, கரும்பு, நெல், மக்காச்சோளம் மற்றும் தானிய வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி என, காய்கறி பயிர்களும் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனம், இறவை, மானாவாரி பாசன நிலங்கள் என, ஏறத்தாழ, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்படும் நிலையில், கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் ஏமாற்றியதால், பாசன ஆதாரமாக உள்ள, பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள், அமராவதி அணைக்கு நீர் வரத்தின்றி பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, இறவை பாசனமும், மழையை நம்பி மேற்கொள்ளப்படும் மானாவாரி பாசனமும் பாதித்தது. இதனால், வழக்கமாக பயிர் சாகுபடி பரப்பளவில், 20 சதவீதம் வரை குறைந்தது. இறுதியில் பெய்த, வடகிழக்கு பருவ மழை, விவசாயிகளுக்கு ஓரளவு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த, 10 ஆண்டு சராசரி மழை பொழிவு, 678.26 மி.மீ., ஆகும். கடந்த, 2023ம் ஆண்டில், 567.59 மி.மீ., மழை மட்டுமே பெய்தது. இயல்பை விட, 110.71 மி.மீ.,மழை குறைந்ததோடு, கடந்தாண்டு, 52 நாட்கள் மட்டுமே மழை பெய்துள்ளது.
இதில், ஜன., பிப்., மாதத்தில் பெய்யும் குளிர் கால மழை, 10 ஆண்டு சராசரியாக, 22.07 மி.மீ., ஆகும். கடந்தாண்டு, 15.22 மி.மீ.,மட்டுமே பெய்துள்ளது. 6.85 மி.மீ.,குறைவாக குளிர் கால மழை பெய்தது.
மார்ச் முதல் மே வரையிலான கோடை கால மழைபொழிவு, சராசரி, 151.62 மி.மீ., ஆகும். கடந்தாண்டு, இக்கால மழை ஓரளவு அதிகரித்து, 156.04 மி.மீ.,கிடைத்துள்ளது.
பாசன ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அளிக்கும் தென்மேற்கு பருவமழை பெருமளவு குறைந்தது. 10 ஆண்டு சராசரி, 191.93 மி.மீ., ஆக உள்ள நிலையில், கடந்தாண்டு, 73.93 மி.மீ.,மட்டுமே கிடைத்தது. 118 மி.மீ.,மழை குறைவாக கிடைத்ததால், கடும் வறட்சி நிலை ஏற்பட்டது.
அதே போல், அக்.,முதல் டிச.,வரையிலான வடகிழக்கு பருவ மழை காலத்தில், 312.64 மி.மீ.,ஆகும். ஆண்டு இறுதி வாரத்தில், ஒரு சில நாட்கள் பெய்த கன மழை காரணமாக, 329.87 மி.மீ.,மழை கிடைத்துள்ளது. தற்போது, அணைகள் நீர் மட்டம் திருப்தியாக உள்ளதோடு, நடப்பாண்டு பருவ மழைகள் திருப்தியாக பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பாசனம், சாகுபடிக்கு ஆதாரமாக உள்ள, கோடை மழை, தென் மேற்கு பருவ மழை பெருமளவு குறைந்ததால், சாகுபடி பரப்பு, 20 சதவீதம் வரை கடந்தாண்டு குறைந்தது. இருப்பினும், ஆண்டு இறுதியில் பெய்த மழை காரணமாக, அணைகள் மட்டுமன்றி, நிலப்பகுதிகளிலும் ஓரளவு பசுமை திரும்பியுள்ளது.
அதனால், பயிர் மற்றும் காய்கறி சாகுபடியில் மீண்டும் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டு, பருவ மழைகள் திருப்தியாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இந்தாண்டு பசுமை பரப்பு மற்றும் உணவு உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு தெரிவித்தனர்.