/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வங்கிகளில் வீட்டுக்கடன் எளிதாக எப்படி பெறலாம்?வங்கிகளில் வீட்டுக்கடன் எளிதாக எப்படி பெறலாம்?
வங்கிகளில் வீட்டுக்கடன் எளிதாக எப்படி பெறலாம்?
வங்கிகளில் வீட்டுக்கடன் எளிதாக எப்படி பெறலாம்?
வங்கிகளில் வீட்டுக்கடன் எளிதாக எப்படி பெறலாம்?
ADDED : பிப் 09, 2024 11:53 PM

வங்கிகள் அல்லது பிற ஹவுசிங் பைனான்ஸ்களில், கடன் பெறுவது எப்படி என்பது குறித்து கூறுகிறார், கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் (காட்சியா) நிர்வாக அலுவலர் ஜெகதீஸ்வரன்.
வீட்டு மனைகள் வாங்குவதற்கும், மனை வாங்கி வீடு கட்டுவதற்கும், ஏற்கனவே கட்டிய வீட்டை அல்லது அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு வீட்டை வாங்கவும் வங்கி கடன் பெறலாம்.
தேவையான ஆவணங்கள்
அதற்கு, சொந்த தொழில் செய்து வருமானவரி செலுத்துபவர்களாக இருந்தால், முந்தைய மூன்று ஆண்டுகள் வருமானவரி செலுத்திய ஆவணங்களை, சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு ஊழியர்களாக இருந்தால், சம்பள ரசீது மற்றும் கடைசி ஆறுமாத வங்கி கணக்கு பரிவர்த்தனை பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கணக்கின் கடைசி ஆறுமாத வங்கி பரிவர்த்தனை பட்டியலை இணைக்க வேண்டும்.
பணிபுரியும் நிறுவனத்திலிருந்து, பணியமர்த்தப்பட்ட பரிந்துரை கடிதம் பெற்று, வங்கி கடன் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தும் கால அவகாசம் மற்றும் தவணை தொகை ஆகியவை, வயது மற்றும் ஓய்வு பெறப்போகும் காலத்தை கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படும்.
வீட்டு வாடகை வருகிறதா?
உங்களுக்கு சொந்த வீடு மற்றும் கடை இருந்து, வீட்டு வாடகை அல்லது கடை வாடகை வருகிறதென்றால், அதையும் உங்கள் வருவாயில் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் கேட்கும் கடன் தொகை மற்றும் மாத தவணை தொகை, கடனை திருப்பிச்செலுத்தும் கால அவகாசம் ஆகியவை, வருமானவரி கணக்கு பரிவர்த்தனை அல்லது நீங்கள் வாங்கும் சம்பளம் அல்லது வயது போதுமானதாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில், உங்களது குடும்ப உறுப்பினர்கள் யாரையேனும் 'கோ-அப்ளிகேன்ட்' ஆக இணைத்துக்கொள்ளலாம். குடும்ப உறுப்பினர் வருமான வரி செலுத்துபவர் அல்லது ஒரு நிறுவனத்தில்பணிபுரிபவராகவோ, அரசு ஊழியராகவோ இருக்கலாம்.
எஸ்டிமேட் இணைக்கணும்
விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரர் ஆகிய இருவரின், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவை இணைக்க வேண்டும்.
நீங்கள் வாங்கும் இடம் அல்லது வீடு அல்லது புதிய வீடு கட்டுவதாக இருப்பின், சம்பந்தப்பட்ட துறையில் இடம் அல்லது வீட்டிற்கு அப்ரூவல் வாங்கி இருக்க வேண்டும்.
இத்துடன், பதிவு பெற்ற பொறியாளரிடம் வீடுகட்டுவதற்கான, உத்தேச மதிப்பீடு (எஸ்டிமேட்) வாங்கி இணைக்க வேண்டும்.
ஒப்பந்தம் போடணும்
நீங்கள் மனை அல்லது அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்குவதானால், முன் தொகை செலுத்தி, ஸ்டாம்ப் பேப்பரில் முன்தொகை கொடுத்து, அக்ரிமென்ட் போட்டிருக்க வேண்டும். அந்த அக்ரிமென்டில், நீங்கள் வாங்கும் விலை மற்றும் நீங்கள் கொடுத்த முன்தொகை ஆகியவற்றையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
மனையின் பத்திரம், அது சம்பந்தப்பட்ட மூலப்பத்திர நகல்கள் மற்றும் இடத்தின் உரிமையாளரின் பெயரில் பட்டா, சிட்டா, வில்லங்க சான்று, அனுமதி பெற்ற கட்டட வரைபடம், கட்டப்படும் வீட்டின் உத்தேச வரைபடம் ஆகியவையும், இணைக்க வேண்டும்.
கடன் வழங்கும் வங்கிகள் பரிந்துரைக்கும், நோட்டரி வழக்கறிஞரிடம் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, லீகல் ஒப்பீனியன் வாங்கி, வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.