/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரோடுகளை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவுரோடுகளை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு
ரோடுகளை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு
ரோடுகளை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு
ரோடுகளை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு
ADDED : மே 30, 2025 12:10 AM

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 24 மணி நேர குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் காஸ் குழாய் பதிப்பு மற்றும் தொலை தொடர்பு துறை ஒயர்கள் பதிப்பதற்காக நகரெங்கும் ரோடுகள் தோண்டப்பட்டு உள்ளன.
பல வீதிகளில் இன்னும் தோண்டப்பட்டு வருகின்றன. அவ்வாறு தோண்டிய ரோடுகளை சரிவர மூடாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
பருவ மழை துவங்கியிருப்பதால், குழியாக இருக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாகி விடுகிறது. வீதிகளுக்குள் நடந்து கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது, தடுமாற்றம் அடைந்து, கீழே விழுகின்றனர்.இச்சூழலில், முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டரை சந்தித்து, கோவையில் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண முறையிட்டனர்.
மாநகராட்சி பகுதியில் மட்டும், 700 கி.மீ., சாலைகள் சிதிலமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, மாநகர பகுதிகளில் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகளுடன், கலெக்டர் ஆலோசித்தார்.
போர்க்கால அடிப்படையில், கணபதியில் இருந்து மணியக்காரன்பாளையம் வழியாக கணுவாய் சாலை, துடியலுார்- - மருதமலை சாலை, ராமநாதபுரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் வழியாக செட்டிபாளையம் சாலையை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டு, நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இச்சாலைகளை மறுசீரமைப்பு செய்வதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு, 110 கோடி ரூபாயை மாநகராட்சி வழங்கியுள்ளது.
ஆனால், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி இன்னும் முழுமையாக முடியாததால், ரோடு போடும் பணியை நெடுஞ்சாலைத்துறை துவக்காமல் இருக்கிறது. இருந்தாலும் கூட, குழாய் பதித்ததும் உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஜி.என்.மில்ஸ் ரோடு மற்றும் கணுவாய் சாலையில் மேற்கொள்ளும் பணிகளை நேற்று கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார்.