Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பலத்த மழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

பலத்த மழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

பலத்த மழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

பலத்த மழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

ADDED : மே 18, 2025 10:08 PM


Google News
Latest Tamil News
கோவை புறநகரில் நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

பெ.நா.பாளையம்


கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை, 11:00 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் கவுண்டம்பாளையத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக, இடையர்பாளையம், பூம்புகார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். குறிப்பாக, பூம்புகார் நகரில் மழையுடன் கலந்த சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.

இது குறித்து, பூம்புகார் நகர் பொதுமக்கள் கூறுகையில்,'சாக்கடை நீர் மழையுடன் கலந்து, வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. குறிப்பாக, தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் சாக்கடை நீர் கலந்து விடுவதால், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து, புதிய தண்ணீர் வாங்கி ஊற்ற வேண்டிய நிலைமை உள்ளது என்றனர்.

சூலூர்


சூலூர், காங்கயம் பாளையம், காடாம்பாடி, வெங்கிட்டாபுரம், குளத்தூர், நீலம்பூர், மயிலம் பட்டி, சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம், 1:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. இரண்டு மணி நேரம் விடாமல் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாக்கடை கால்வாய்கள் நிரம்பி ரோடுகள், வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றும் வீசியது.

சூலூர் அடுத்த சின்னியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கிட்டாபுரம்.இந்த ரோட்டில், மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அருகில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், மக்கள் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து அங்கு சென்ற, தூய்மை பணியாளர்கள், சாக்கடை வடிகாலில் அடைந்திருந்த குப்பையை அகற்றி, மழைநீர் செல்ல வழி ஏற்படுத்தினர். இதையடுத்து, ரோட்டில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேறியது.

அன்னுார்


அன்னூர் வட்டாரத்தில், கடந்த ஒரு ஆறு நாட்களில், மூன்று நாட்கள் மழை பெய்துள்ளது. குறிப்பாக கடந்த 13ம் தேதி 42.5 மி.மீ., 15ம் தேதி 12.4 மி.மீ., 17ம் தேதி 15.2 மி.மீ., மழை பெய்தது. இதனால் அன்னூர், கெம்பநாயக்கன்பாளையம், கஞ்சப்பள்ளி, கரியாம்பாளையம், குன்னத்தூர், காட்டம்பட்டி உள்ளிட்ட குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

மழையால் எல்லப்பாளையத்தில் 150 ஆண்டுகளான அரசமரம் வேரோடு சாய்ந்தது. பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக் கிளைகள் முறிந்து விழுந்தன.

எல்லப்பாளையத்தில் 10 வீடுகளின் மேற்கூரை சேதம் அடைந்தது. மின் கம்பங்கள், விளம்பர பலகைகள், ஆடு, மாடு கொட்டகைகள், கோழி பண்ணைகள் ஆகியவற்றின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

வருவாய் துறையினரும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினரும் சேதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தொடர் மழையால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கோடைகால பயிருக்கு இந்த மழை உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

-நிருபர் குழு-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us