ADDED : ஜூன் 05, 2025 01:05 AM
அன்னுார்; கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் (எண் 948) பசுமை வழிச் சாலை அமைக்க 738 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்தவர்களின் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவில்பாளையம், குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், கோவையில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரிடம் (நிலம் எடுப்பு) கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது :
கோவில்பாளையத்தில், ஊருக்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் பல நூறு ஏக்கரில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. டி.டி.சி.பி., மனையிடங்கள் என்பதால் 500க்கும் மேற்பட்டோர் இங்கு இடம் வாங்கி வீடு கட்டி உள்ளோம். சிலர் கட்டி வருகின்றனர். இந்த குடியிருப்புக்கு நடுவே புதிய பசுமை வழிச் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இது இந்த குடியிருப்புகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தும்.மேலும் இதை ஒட்டி, லட்சுமி நகர், டி.வி.எஸ்., நகர் என பல குடியிருப்புகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
அரசின் அங்கீகாரம் பெற்ற குடியிருப்பில் இடம் வாங்கினாலும், வீடு கட்டினாலும் எந்த பாதிப்பும் வராது என்ற நம்பிக்கையில் எங்கள் வாழ்நாள் சேமிப்பை முழுவதும் செலவழித்து இடம் வாங்கி, வீடு கட்டி உள்ளோம். எனவே, இதை தவிர்த்து, ஏற்கனவே உள்ள கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தலாம்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனுவை பெற்ற அதிகாரிகள், ' உங்களுடைய கருத்து அரசுக்கு தெரிவிக்கப்படும்,' என்றனர்.