/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசுப்பள்ளியில் முப்பெரும் விழா: மாணவர்கள் கலைநிகழ்ச்சி அசத்தல்அரசுப்பள்ளியில் முப்பெரும் விழா: மாணவர்கள் கலைநிகழ்ச்சி அசத்தல்
அரசுப்பள்ளியில் முப்பெரும் விழா: மாணவர்கள் கலைநிகழ்ச்சி அசத்தல்
அரசுப்பள்ளியில் முப்பெரும் விழா: மாணவர்கள் கலைநிகழ்ச்சி அசத்தல்
அரசுப்பள்ளியில் முப்பெரும் விழா: மாணவர்கள் கலைநிகழ்ச்சி அசத்தல்
ADDED : பிப் 12, 2024 12:16 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, கலை, இலக்கிய விழா என முப்பெரும் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்வி மாவட்ட அலுவலர் கேசவகுமார் முன்னிலை வகித்தார்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா பேசுகையில், ''நாம் எதைச் செய்தாலும் திட்டமிட்டு செய்ய வேண்டும். எனக்கு, ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற சிந்தனை, ஆறாம் வகுப்பு படிக்கும் போதே துவங்கியது. அவ்வாறு திட்டமிட்டு படிக்கும் போது நாம் உலக விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் கூர்ந்து படித்தால் நிச்சயம், நாளை இந்த பள்ளியில் இருந்து ஒரு கலெக்டர் உருவாகலாம்,'' என்றார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொள்ளாச்சி நேதாஜி இளைஞர் சமூக நல அறக்கட்டளை தலைவர் வெள்ளை நடராஜ், கவிஞர் முருகானந்தம், கவுன்சிலர் சாந்தலிங்கம், மாக்கினாம்பட்டி ஊராட்சி தலைவர் மாரியம்மாள், மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வரலாற்று ஆசிரியர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.
உடுமலை
கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.
பள்ளி மாணவர்களின் இறைவணக்க பாடலுடன் விழா துவங்கியது. பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் தலைமை வகித்து மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினர். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
மாணவர்களின் யோகா கலை, நாட்டுபுற பாடல், வண்ணத்துபூச்சி ஆட்டம், பாரி வள்ளல் குறித்த நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். விழாவில், மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
* மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியில் தமிழ் கூடல் நிறைவுவிழா, விளையாட்டுவிழா மற்றும் ஆண்டுவிழா ஒருங்கிணைந்து நடந்தது. பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜெயசந்திரன் வரவேற்றார். தலைமையாசிரியர் ரத்தினசாமி தலைமை வகித்தார்.
மடத்துக்குளம் பேரூராட்சித்தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தார். உடுமலை சார்பு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் மாணவர்களுக்கு கல்வியும் ஒழுக்கமும் குறித்து பேசினார். தொடர்ந்து நீதிபதிகள் விஜயகுமார், பாலமுருகன், மீனாட்சி மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினர்.
முன்னாள் மாணவர் வக்கீல் மனோகரன் கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பேசினார். பள்ளிக்கு நுாறு சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும், அறையாண்டு தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும், இலக்கியம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், அருகிலுள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கல்வியில் சிறந்துள்ள மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கவிதா, ஊராட்சி பிரதிநிதிகள், பெற்றோர் மேலாண்மைக் குழுவினர் விழாவில் பங்கேற்றனர். ஆசிரியர் உமா நன்றி தெரிவித்தார்.
* சடையகவுண்டன்புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டுவிழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் வரவேற்றார். பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வீரம்மாள், துணைத்தலைவர் அரசகுமார் முன்னிலை வகித்தனர்.
அப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் மகுடேஸ்வரன் 'மாணவரும் கல்வியும்' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், லக்கி கார்னர், பலுான்உடைத்தல், உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., ஆசிரியர் சரவணன், ஆசிரியர் ஜான்பாஷா போட்டிகளை நடத்தினர். மாணவர்களின் கிராம நடனம், இசை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி உதவி ஆசிரியர் சரஸ்வதி நன்றி தெரிவித்தார்.
ஆனைமலை
ஆனைமலை அருகே, கோட்டூர் மலையாண்டிபட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பெற்றோர் -- ஆசிரியர் கழக தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். துணை தலைவர் தர்மு, ஆழியாறு அறக்கட்டளை அறங்காவலர்கள் சின்ராஜ், பூங்கோதை முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் சிவப்பிரியா வரவேற்றார்.
உதவி தலைமையாசிரியர் ஜெபக்குமாரி சுசீலா, ஆண்டறிக்கை படித்தார். நம்பள்ளி நம் பெருமை, ஒழுக்கத்தின் மேன்மை, உழைப்பால் உயர்வோம் என்ற தலைப்புகளில் பேசினர்.
நடப்பு கல்வியாண்டில், 100 சதவீதம் வருகை தந்த மாணவியர், வகுப்பு வாரியாக மற்றும் பாடவாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவியர், கடந்தாண்டு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு, ஆழியாறு அறக்கட்டளை சார்பில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற முதுகலை ஆசிரியர் சிவக்குமாரை பாராட்டி, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வாயிலாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
'தமிழ்க்கூடல் 2023' நிகழ்வில், பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவ, மாணவியினர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழாசிரியர் உமா நன்றி கூறினார்.