/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவல நிலையில் அரசுப் பள்ளி கட்டடம் அவல நிலையில் அரசுப் பள்ளி கட்டடம்
அவல நிலையில் அரசுப் பள்ளி கட்டடம்
அவல நிலையில் அரசுப் பள்ளி கட்டடம்
அவல நிலையில் அரசுப் பள்ளி கட்டடம்
ADDED : ஜூன் 17, 2025 09:34 PM

அன்னுார்,; 'குமாரபாளையம், நடுநிலைப்பள்ளி கட்டடம் மோசமான நிலையில் உள்ளது,' என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
அன்னுார் அருகே அ. குமாரபாளையத்தில், 65 ஆண்டுகளாக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் இங்கு படிக்கின்றனர்.
இப்பள்ளியில் உள்ள வடக்குப்புற கட்டடம் மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்யும் போது கான்கிரீட் மேல் தளம் மற்றும் சுவர்களில் தண்ணீர் தேங்கி கட்டடத்தை பலவீனப்படுத்துகிறது.
பள்ளி வளாகத்தில் சிமெண்டு தளம் அமைக்கப்படாததால் மண் தரையில் மழை நீர் தேங்கி குளம் போல் நிற்கிறது. மழை பெய்யும் போது மாணவர்கள் பள்ளிக்குள் வர சிரமப்படுகின்றனர். கூரையில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. காம்பவுண்ட் சுவர் இல்லாமல் வெறும் வேலி போடப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் கம்பி வேலியைத் தாண்டி, பள்ளி வளாகத்தில் மது அருந்துகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பள்ளியின் வடக்கு பகுதியில் உள்ள அபாயகரமான கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும். பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். பள்ளியின் முன்புறம் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் அல்லது டைல்ஸ் பதிக்க வேண்டும். இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும், தேசிய வருவாய் வழி தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர். கடந்தாண்டு நடைபெற்ற தேர்வில் அன்னுார் வட்டாரத்தில் இந்தப் பள்ளியில் மட்டும் மூன்று பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுகின்றனர்,' என்றனர்.