/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விடிந்ததும் 'சரக்கு'; விடியாத இரவிலும் கிடைக்கும்! 24 மணி நேரமும் மது விற்பனையால் தாய்மார்கள் கண்ணீர் விடிந்ததும் 'சரக்கு'; விடியாத இரவிலும் கிடைக்கும்! 24 மணி நேரமும் மது விற்பனையால் தாய்மார்கள் கண்ணீர்
விடிந்ததும் 'சரக்கு'; விடியாத இரவிலும் கிடைக்கும்! 24 மணி நேரமும் மது விற்பனையால் தாய்மார்கள் கண்ணீர்
விடிந்ததும் 'சரக்கு'; விடியாத இரவிலும் கிடைக்கும்! 24 மணி நேரமும் மது விற்பனையால் தாய்மார்கள் கண்ணீர்
விடிந்ததும் 'சரக்கு'; விடியாத இரவிலும் கிடைக்கும்! 24 மணி நேரமும் மது விற்பனையால் தாய்மார்கள் கண்ணீர்
ADDED : ஜூன் 16, 2025 08:30 PM

தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் பெரும்பாலும், மனிதனை அடிமையாக்கும் மது போதையால்தான் நடக்கின்றன என்பது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
கோவை தெற்கு மாவட்டத்தில், 108 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. அதில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் மட்டும், 11 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. ஆனைமலையில் 11 கடைகள் இயங்குகின்றன. இந்த கடைகள் பெரும்பாலும், 'பார்' உடன் செயல்படுகின்றன.
மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை செயல்பட வேண்டிய 'டாஸ்மாக்' பார்கள் பல, குற்றவாளிகளுக்கு வசதி செய்து தருவது போல், 24 மணி நேரமும் செயல்படுகின்றன.
பெரும்பாலான பார்களில்,காலை,6:00 மணி முதலே'குடி'மகன்களுக்கு 'சரக்கு' தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை விலையுடன் குவாட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.50 முதல் சேர்த்து, கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.
'டாஸ்மாக்' விடுமுறை நாட்களில், இரண்டு மடங்கு விலை வைத்து பார் உரிமையாளர்கள் லாபம் பார்க்கின்றனர். கோவில், பள்ளிகள், பஸ் ஸ்டாண்ட்கள் அருகே செயல்படும் 'டாஸ்மாக்' பார்களால் பெண்கள், குழந்தைகள் தினமும் பயத்துடன், 'குடி'மகன்களை கடந்து செல்கின்றனர்.
பகிரங்க விற்பனை
பொள்ளாச்சி நகரில், ஏ.டி.எஸ்.சி., தியேட்டர் ரோடு, ராஜாமில் ரோடு, மார்க்கெட் ரோடு, கோட்டூர் ரோடு என அனைத்து டாஸ்மாக் 'பார்'களிலும் விற்பனை அமோகமாக நடக்கின்றன.
ஜமீன்ஊத்துக்குளி, குஞ்சிபாளையம் பிரிவு, ஆனைமலை, சேத்துமடை, அழுக்குச்சாமியார் கோவில் அருகே பகிரங்க விற்பனை நடக்கிறது.
உடுமலை நகரில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ள ராஜேந்திரா ரோடு, அனுஷம் நகர் டாஸ்மாக் கடை அருகில், மது விற்பனை ஜோராக நடக்கிறது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தேவனுார்புதுார் சுற்றுவட்டாரங்களிலும் அனைத்து நேரங்களிலும், மது விற்பனை தாராளமாக நடக்கிறது.
'குடி'மகன்கள் அட்டகாசத்தால், பாதிக்கப்படுவர்கள் போலீசில் புகார் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட 'டாஸ்மாக்' மதுக்கடைக்கு தகவல் தெரிவித்து, தற்காலிகமாக விற்பனையை நிறுத்தும் கூத்தும் உடுமலையில் நடக்கிறது.
குற்றம் அதிகரிப்பு
குடிக்கு பணம் கிடைக்காதவர்கள் செயின் பறிப்பு, மொபைல் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.பொள்ளாச்சி உடுமலையில் சமீப காலமாக தேங்காய், ஆடு, கோழி திருட்டும் நடக்கிறது.
'மாமூல்' பெற்றுக்கொண்டு, பார்களில் நடக்கும் விதிமீறல்களை கண்டுகொள்ளாத, நேர்மை தவறிய போலீசாராலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது எனலாம்.
'எந்த அரசு வந்தாலும் இதே நிலைதான்; எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ' என கண்ணீர் வடிக்கின்றனர், குடியால் கணவர், பிள்ளைகளை இழந்து நிற்கும் தாய்மார்கள்.
டாஸ்மாக் கடை ஊழியர்கள், பார் நிர்வாகத்துடன் கூட்டணி அமைத்து, தேவைக்கேற்ப 'சரக்கு' சப்ளை செய்கின்றனர். பாரில் இருப்பு வைத்து, கடை திறக்காத நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
இந்த இல்லீகல் வியாபாரம் எவ்வித தடையுமின்றி, பகிரங்கமாக நடக்கிறது. இதற்கு பதிலாக டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படும் என்றே அறிவித்து விடலாம்.
- நிருபர் குழு -