/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புவிசார் குறியீடு உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கான உலகத்தடம்புவிசார் குறியீடு உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கான உலகத்தடம்
புவிசார் குறியீடு உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கான உலகத்தடம்
புவிசார் குறியீடு உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கான உலகத்தடம்
புவிசார் குறியீடு உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கான உலகத்தடம்
UPDATED : ஜன 31, 2024 01:08 PM
ADDED : ஜன 31, 2024 02:08 AM

எஸ்.ரவி
கட்டுரையாளர், கோவையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஹைதராபாத் சட்டப்பல்கலைக்
கழகத்தில் (NALSAR) அறிவுசார்சொத்துரிமைக்கான பட்ட மேற்படிப்பு படித்தவர்.
ஹைதராபாத்தில் வசித்து வருபவர். காப்புரிமை,வர்த்தக குறியீடு மற்றும் புவிசார் குறியீடு
ஆகியவற்றுக்கான மத்திய அரசின் முகவராகவும்,அட்டர்னியாகவும் பணியாற்றுபவர்.
இந்தியாவில் சொத்துக்கான வழக்குகள் தான் எக்கச்சக்கமாக நடக்கின்றன. நமக்குரிய சொத்துக்காக சட்டரீதியாகப் போராடினால், காலம் கடந்தும் கூட அதை மீட்டு விடலாம். ஆனால் நம்முடைய அறிவால், ஆற்றலால், ஆளுமைத்திறனால் உருவாக்கிய ஒரு கண்டுபிடிப்பை யாரோ ஒருவர் 'இது என்னுடைய படைப்பு' என்று உரிமை கொண்டாடினால், அந்த வேதனையிலிருந்து நம்மால் மீளவே முடியாது.
நம் நாட்டில் சொத்தைக் காக்க உயிரையும் கொடுக்கிறார்கள். வளர்ந்த நாடுகளில், 'அறிவு சார் சொத்துரிமை'யைத்தான் தங்களின் உயிராகக் கருதுகிறார்கள். கடந்த கால் நுாற்றாண்டாக, நம் நாட்டிலும் காப்புரிமை (patent right) உள்ளிட்ட பல தரப்பட்ட அறிவு சார் சொத்துரிமை (Intellectual property Rights) குறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருப்பதை மறுக்க முடியாது; ஆனால் கண்டிப்பாக இது போதாது.
தாராளமயமாக்கல் காரணமாக பன்னாட்டு வர்த்தகம் பெருகியுள்ளது; அதன் விளைவு, அறிவு சார் சொத்துரிமை குறித்து நாம் அறியத் துவங்கியுள்ளோம். இருப்பினும் இவை சார்ந்த அறிவு, நமக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. இந்த அறிவு சார் சொத்துரிமைகளில், தனி அங்கமாகவுள்ள புவிசார் குறியீடு (Geographical Indication) குறித்த நம் கவனத்தை, தீவிரமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
அதென்ன புவிசார் குறியீடு?
ஒரு பகுதியின் காலநிலை, மண்ணின் வளம், சூழல் சார்ந்து, சில பொருட்கள் இயற்கையாகக் கிடைக்கும். அதேபோல, ஒரு பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, அந்த மண்ணின் மைந்தர்கள் தங்கள் கைப்பக்குவத்தால், கைவினைத் திறனால் சில பொருட்களைச் செய்வார்கள். அந்தப் பொருட்களின் தனித்துவம் தான், அவற்றின் தனி அடையாளம்; அதற்கான அங்கீகாரம் தான் புவிசார் குறியீடு.
உதாரணத்துக்கு, வாழைப்பழத்தையே எடுத்துக் கொள்வோம். எல்லா வாழைப்பழத்தையும், கவுண்டமணியிடம் செந்தில் சொல்வதைப் போல, 'இதான்ணே அது' என்று சொல்லி விட முடியாது. திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை வாழைப்பழத்துக்கு, தனிச்சுவை, தன்மை, ஆரோக்கிய குணங்கள் உள்ளன. அப்பழத்துக்கான ஈர்ப்பு அதிகமாக இருப்பதால் தான், அதற்கு 'புவி சார் குறியீடு' கிடைத்துள்ளது.
இது போலத்தான், விருப்பாச்சி, மதுரை மல்லிகை, நீலகிரி தேயிலை, கும்பகோணம் வெற்றிலை என்று பல்வேறு விளை பொருட்களுக்கு இந்த குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இங்கே மட்டுமில்லை; பழமையும், பாரம்பரியமும் கொண்ட நம் தேசத்தில், பல மாநிலங்களிலும், பல ஊர்களிலும் இது போல தனித்துவம் வாய்ந்த பல விளைபொருட்களுக்கு, இந்த உலகளாவிய அடையாளம், அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மராட்டிய மாநிலம், நாக்பூரில் விளையும் ஆரஞ்சுப் பழம், அதன் தனிச்சுவையால் சர்வதேச அளவில் ஒரு சந்தையைப் பிடித்திருக்கிறது. அதற்குக் கிடைத்த புவிசார் குறியீடும், முக்கியமான காரணம். இயற்கையில் விளையும் இந்த உணவுப்பொருளைப் போலவே, மனிதக்கையால் தயாராகும் உணவுப் பொருளுக்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
கோவில்பட்டி கடலை மிட்டாய், துாத்துக்குடியில் முட்டைகளின் வெண்கருவில் தயாரிக்கப்படும் மக்ரோனி, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா என இதிலும் புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழகப் பொருட்கள் தனிப்பட்டியலாக நீளும். இதில் விண்ணப்பித்து, இன்னும் அங்கீகாரம் பெற பல பொருட்கள் காத்திருக்கின்றன; காரமடை செங்காம்பு கறிவேப்பிலையும் அதில் ஒன்று.
இந்தப் பொருட்களின் தனிச்சிறப்புக்கு, அந்த விளைபொருட்களின் தனித்தன்மை மட்டுமின்றி, அந்த மண்ணின் மைந்தர்களின் தனித்திறனும் முக்கியக் காரணம். மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் ரசகுல்லா, ராஜஸ்தானின்பிகானீர் புஜியா,ஹைதராபாத்தில் தயாரிக்கப்படும்ஹைதராபாத் ஹலீம் என உற்சாகமூட்டும் உணவுப் பொருட்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஹைதராபாத்தில் ஆட்டிறைச்சியால் தயாரிக்கப்படும் ஹலீம், இந்திய புவிசார் குறியீடுப் பொருட்களில் முதலிடத்துக்குத் தேர்வு பெற்ற பொருள் என்பது உலகமறியாத சிறப்புச்செய்தி. அடுத்து, கைவினைத் திறனுக்கான அடையாளங்களாகக் காட்டுவதற்கு, காஞ்சிப்பட்டு, சேலம் வெண்பட்டு மற்றும் மதுரை சுங்குடி, கோவை கோரா, நெகமம் காட்டன் என நிறைய இருக்கின்றன.
சுவாமி மலை ஐம்பொன் விக்கிரகங்கள், புதுச்சேரி வில்லியனூர் சுடுமண் சிற்பங்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஆந்திர மாநிலம், கொண்டப்பள்ளி மற்றும் கர்நாடக மாநிலம், சென்னபட்டனா பொம்மைகள் (traditional toys clusters) என கைவினைப் பொருட்களுக்கு கிடைத்துள்ள புவிசார் குறியீடு, அவற்றுக்கான வரவேற்பு பற்றி எல்லோரும் தெரிந்து கொள்வதற்கு ஏகப்பட்ட விஷயம் இருக்கிறது.
இந்த புவிசார் குறியீடு வாங்குவதால் என்ன பயன், அதைப் பெற நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பலரும் கேட்கிறார்கள். காப்புரிமைகள், பிரத்யேக வடிவங்கள், வர்த்தக குறியீடுகள் ஆகிய வற்றுக்கும், புவிசார் குறியீடுகளுக்கும் இடையே இருக்கும் முக்கியமான ஒரு வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்வது மிகமிக அவசியம்.
தனி ஒருவனுக்கு இல்லை!
காப்புரிமை, வர்த்தகக் குறியீடு போன்றவற்றை, ஒரு தனி நபர் அல்லது நிறுவனங்கள் உரிமையாக்கிக் கொள்ளலாம். ஆனால் புவிசார் குறியீடு என்பதை, எந்த ஒரு தனி நபரும் சொந்தம் கொண்டாட முடியாது.
புவிசார் குறியீடு வாங்குவது பெரிய சவால் தான். ஆனால் அதை வைத்து, உங்களின் வர்த்தகத்தை, வாழ்வாதாரத்தை எப்படி நீங்கள் மேம்படுத்தப் போகிறீர்கள் என்பது தான் அதை விடப் பெரிய காரியம். ஆனால், இன்றைய மின்னணு உலகில், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை பிரபலப்படுத்தி, சர்வதேச சந்தையைக் கைப்பற்றுவது மிக எளிதான வழிமுறைதான்.
இதைப் பெற்று விட்டால், விளம்பரப்படுத்துதல், சந்தைப் படுத்துதல், ஏற்றுமதி தொடர்பு எல்லாமே, இலகுவாகி விடும். அது உங்களின் வர்த்தகத்தைப் பெருக்கும்; வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் தயாரிப்புச் சங்கிலியில் உள்ளோரின் ஒட்டு மொத்த பொருளாதாரம் 10 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனெனில் நல்லதைத் தேடி வாங்குவதற்கு, இங்கே மட்டுமில்லை உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பரிதவிப்போடு காத்திருக்கிறார்கள். குறிப்பாக, வம்சாவளி இந்தியர்கள், நம் தமிழ் மண்ணின் தடங்களை, தயாரிப்புகளை நேசிக்கிற தமிழர்கள் உலகெங்கும் பரவிக்கிடக்கிறார்கள். அவர்களுக்கு நம்மூர் பொருளின் மகத்துவம் தெரியும்; அதை வாங்குவதால் ஏற்படும் நன்மைகள் புரியும்.
இந்த ஆர்வமும், உலகளாவிய ஆதரவும் தான், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கான காசில்லா விளம்பரம். இவை தவிர்த்து, பொருட்களின் தடங்காணுதல் (Traceability), தரமான பொதிவு (Quality Packaging), அதன் சிறப்பை விளக்கும் குறிப்பு ஆகியவற்றை, சரியாகச் செய்தால், அதற்குக் கிடைக்கும் வரவேற்பு, வர்த்தகம், வாழ்வாதாரம் 'வேற லெவல்' ஆக இருக்கும்.
புவிசார் குறியீடு... தேசிய அங்கீகாரம் மட்டுமில்லை; அது உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கான உலகத்தடம்!