ADDED : ஜூன் 15, 2025 10:08 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் சார்பில், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இம்மையம், கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள சுய தொழில் செய்ய விரும்பும் கிராமப்புற இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி அளித்து வருகிறது.
இங்கு தையல் பயிற்சி 4 மாதங்கள், ஆரி எம்பிராய்டரி 3 மாதங்கள், வீட்டு ஒயரிங் மற்றும் பிளம்பிங் 4 மாதங்கள், மின் சாதனங்கள் பழுது பார்த்தல் 2 மாதங்கள், அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி இரண்டு மாதங்கள், போட்டோகிராபி பயிற்சி இரண்டு மாதங்கள் ஆகியன வழங்கப்பட உள்ளன.
பயிற்சியை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். சுயதொழில் செய்ய விரும்புவோர், தொழில் தொடங்க, வங்கி கடன் பெற ஆலோசனை வழங்கப்படும்.இலவச பயிற்சியில் சேர விரும்புவோர், ஆதார் கார்டு நகல், படிப்பு சான்றிதழ் நகல் மற்றும், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் உடனடியாக, தேசிய மனித மேம்பாட்டு மையம், குப்பிச்சிபாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம், கோவை, 20 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், செல், 81223 22381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, இம்மையத்தின் இயக்குனர் சகாதேவன் தெரிவித்தார்.