ADDED : ஜூன் 11, 2025 09:11 PM
அன்னுார்; பிள்ளையப்பம்பாளையத்தில், இலவச தொழிற்பயிற்சி துவக்க விழா நடந்தது.
பிள்ளையப்பம்பாளையத்தில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி சார்பில், கிராமப்புற மகளிர் தொழில்நுட்ப பூங்கா செயல்படுகிறது.
இங்கு ஆஸ்திரேலிய அரசின் நேரடி நிதி உதவி திட்டத்தில், உணவுப் பொருட்கள் தயாரிப்பு, பதப்படுத்துதல், கம்ப்யூட்டர் கல்வி, வணிக பயிற்சி குறித்த ஒரு மாத இலவச பயிற்சி வகுப்பு துவங்கியது. துவக்க விழாவில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லூரி முதல்வர் ஹாரத்தி பயிற்சியை துவக்கி வைத்தார்.
பேராசிரியை அகிலாண்டேஸ்வரி பேசுகையில், ''இத்திட்டத்தில் எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. வங்கி கடன் பெறவும், சுயதொழில் செய்யவும், உரிய வழிகாட்டுதல் செய்யப்படும். 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பயிற்சி நடைபெறும், என்றார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.