/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தாயை பிரிந்த யானையை பராமரிக்கும் வனத்துறையினர் பரிசலில் முகாமுக்கு கொண்டுவர முடியாத நிலை தாயை பிரிந்த யானையை பராமரிக்கும் வனத்துறையினர் பரிசலில் முகாமுக்கு கொண்டுவர முடியாத நிலை
தாயை பிரிந்த யானையை பராமரிக்கும் வனத்துறையினர் பரிசலில் முகாமுக்கு கொண்டுவர முடியாத நிலை
தாயை பிரிந்த யானையை பராமரிக்கும் வனத்துறையினர் பரிசலில் முகாமுக்கு கொண்டுவர முடியாத நிலை
தாயை பிரிந்த யானையை பராமரிக்கும் வனத்துறையினர் பரிசலில் முகாமுக்கு கொண்டுவர முடியாத நிலை
ADDED : ஜூன் 06, 2025 11:43 PM

மேட்டுப்பாளையம்; தாயைப் பிரிந்து தவித்து வந்த, குட்டி யானையை, சிறுமுகை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். பவானிசாகர் அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், பரிசலில் குட்டி யானையை கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுமுகை வனப்பகுதி, 12,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. கடந்த மாதம், 26ம் தேதி சிறுமுகை வனப் பணியாளர்கள், கூத்தாமண்டி பிரிவு, எதிர்மூஞ்சி முகாம் ஆகிய வனப்பகுதிகளில், ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது தாயைப் பிரிந்த ஆண் குட்டி யானை, அங்குமிங்கும் தள்ளாடியபடி நடந்து சென்றது. இதை பார்த்த வனப் பணியாளர்கள், அருகே யானைகள் கூட்டமாக உள்ளதா என, தேடிப் பார்த்தனர். ஆனால் யானை கூட்டம் இல்லாததால், குட்டி யானையை, சிறுமுகை எதிர்மூஞ்சி வனத்துறை முகாமுக்கு, அழைத்து வந்தனர்.
இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ்க்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில்,கால்நடை டாக்டர் சுகுமார், உடல் மெலிந்த குட்டி யானைக்கு மருத்துவ சிகிச்சையும், சத்தான உணவுப் பொருளும் வழங்கி, சிகிச்சை அளித்தார். குட்டி யானை புல் சாப்பிட தொடங்கியதால், தாய் யானை மற்றும் யானைகள் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை கால்நடை டாக்டர் சுகுமார் கூறுகையில், 'குட்டி யானைக்கு லாக்டோ ஜி பால் பவுடர் காலையில் கொடுக்கப்படுகிறது. மாலையில் நடை பயிற்சியில் அதை ஈடுபட செய்கின்றனர். தற்போது குட்டி யானை நன்றாக உள்ளது.குட்டியை, யானை முகாமிற்கு கொண்டு செல்ல, பரிந்துரை செய்துள்ளேன்' என்றார்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறியதாவது:
தாயை பிரிந்த போது, உடல் மெலிந்திருந்த குட்டி யானை தற்போது, உடல் நலம் தேறி நன்றாக உள்ளது. தற்போது பவானிசாகர் அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், குட்டி யானையை பரிசலில், ஆற்றை கடந்து, யானை முகாமுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தொடர்ந்து சிறுமுகைப் பகுதியில், பராமரித்து வருகிறோம். இருந்த போதும் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இதற்காக டிரோன் வாயிலாக, யானை கூட்டம் இப்பகுதியில் உள்ளதா எனவும், வனத்துறையினர் வாயிலாகவும், தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.