/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழுதான உயர் கோபுர மின்விளக்கு; பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து பழுதான உயர் கோபுர மின்விளக்கு; பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து
பழுதான உயர் கோபுர மின்விளக்கு; பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து
பழுதான உயர் கோபுர மின்விளக்கு; பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து
பழுதான உயர் கோபுர மின்விளக்கு; பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து
ADDED : ஜூன் 11, 2025 09:14 PM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கம்மாள் காலனியில் பழுதான உயர் கோபுர மின்விளக்கு பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறி உள்ளது.
துடியலூர் அருகே உள்ளது அசோகபுரம் ஊராட்சி. இங்குள்ள ரங்கம்மாள் காலனியில், பொதுமக்கள் அதிகம் நடமாடும் விநாயகர் கோவில் சந்திப்பில், 60 அடி உயரத்தில் உயர் கோபுர மின்விளக்கு பொதுமக்களின் வசதிக்காக அசோகபுரம் ஊராட்சி சார்பில் நிறுவப்பட்டது. வட்ட வடிவிலான எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்ட உயர் கோபுர விளக்கு வெளிச்சம் அப்பகுதி முழுவதும் இரவு நேரங்களில் ஒளிரும். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களிலும் பாதுகாப்பாக, தாராளமாக சென்று வர முடியும் என்ற நிலை உருவானது.
சுமார், 9 லட்ச ரூபாய் செலவில் நிறுவப்பட்ட உயர் கோபுர மின்விளக்கின் மேல் பகுதி கழன்று ஆபத்தான நிலையில் கடந்த, 2020 ஆண்டு முதல் தொங்கிக் கொண்டு உள்ளது.
எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் என்ற சூழ்நிலையில், அதை அகற்ற அசோகபுரம் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,' உயர் கோபுர மின்விளக்கின் எல்.இ.டி., பல்புகள் திடீரென பழுதானதால், அதனை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மேல் மட்டத்தில் உள்ள வட்ட வடிவிலான மின்விளக்கு தலைகீழாக தொங்கும் நிலை ஏற்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது' என்றனர்.
இது குறித்து அசோகபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், மின் விளக்கை கீழே இறக்கி பழுது பார்க்க உயர் தொழில்நுட்பம் கொண்ட கிரேன் தேவைப்படுகிறது. இதற்கு தற்போது ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும். மாவட்ட நிர்வாகத்திடம் நிதி கோரி, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தால் பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றனர்.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டிருக்கும் உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக போர்க்கால அடிப்படையில் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.