/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'நிலங்களை முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள்' அமைச்சரிடம் விவசாயிகள் மனு'நிலங்களை முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள்' அமைச்சரிடம் விவசாயிகள் மனு
'நிலங்களை முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள்' அமைச்சரிடம் விவசாயிகள் மனு
'நிலங்களை முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள்' அமைச்சரிடம் விவசாயிகள் மனு
'நிலங்களை முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள்' அமைச்சரிடம் விவசாயிகள் மனு
ADDED : ஜன 11, 2024 10:18 PM
சூலுார்;சூலுாரில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவுக்கு நிலம் எடுக்கும் திட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் வளர்ச்சிக்காக, சூலுார் விமானப்படைத் தளம் அருகே தொழிற்பூங்கா அமைக்க, திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பருவாய் கிராமத்தில், 85.47 ஏக்கர் பட்டா நிலமும், 0.90 ஏக்கர் புறம்போக்கு நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சூலுார் தாலுகா அப்பநாயக்கன்பட்டி, காங்கயம் பாளையம் மற்றும் காடாம்பாடியில் 111.77 ஏக்கர் பட்டா நிலமும், 0.99 ஏக்கர் புறம்போக்கு நிலம், என, மொத்தம், 200 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து, கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். நேற்று முன்தினம் சூலுார் வந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
எங்கள் நிலங்கள், விமானப்படைத் தளம் அருகே உள்ளன. அங்கு விவசாயத்தை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு பக்கம் விமானப்படைத்தள சுற்று சுவர் உள்ளது. மறுபுறம் தொழிற்பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த உள்ளனர். இரு பகுதிகளுக்கு இடையில் உள்ள நிலத்தை வைத்துக்கொண்டு விவசாயம் கூட செய்ய முடியாத சூழல் ஏற்படும். எங்களது நிலங்களுக்கு செல்ல வழி கூட இருக்காது.
அதனால், முழுமையாக நிலத்தை எடுத்துக்கொண்டு, சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கையை மனுவாக அமைச்சரிடம் அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.