/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ADDED : செப் 14, 2025 01:51 AM

மேட்டுப்பாளையம்;வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதம் செய்யும் யானைகளை பிடிக்கக்கோரி, சிறுமுகை வனத்துறை அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் சிறுமுகை, லிங்காபுரம், வச்சினம்பாளையம், பாலப்பட்டி ஊமப்பாளையம் ஆகிய பகுதிகளில், வாழை மற்றும் பாக்கு மரங்களை விவசாயிகள் பிரதானமாக விவசாயம் செய்து வருகின்றனர். சில இடங்களில் வாழைத்தார்கள் அறுவடை செய்யும் நிலையில் உள்ளன.
சிறுமுகை வனப்பகுதியில் இரு யானைகள், மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளில், விவசாய நிலங்களில் புகுந்து, வாழைகளையும், பாக்கு மரங்களையும் சேதம் செய்து வருகின்றன. சிறுமுகை வனத்துறை அலுவலர்களிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்காமல் வனத்துறையினர் காலம் கடத்தினர்.
சிறுமுகை வனத்துறை அலுவலகத்தை, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேணுகோபால் தலைமையில் விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். சிறுமுகை, லிங்காபுரம், வச்சினம்பாளையம், வேடர் காலனி, பாலப்பட்டி, ஊமப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
அவர்கள் கூறுகையில், 'வாழைகளையும், பாக்கு மரங்களையும் யானைகள் ஒரு மாதமாக சேதம் செய்து வருகின்றன. அவற்றை பிடித்து வேறு இடங்களில் விட வேண்டும் அல்லது அவற்றை விரட்டியடிக்க வேண்டும்' என்றனர்.
வனத்துறை அலுவலர்களிடம் விவசாயிகள் தங்களது கோரிக்கையை முறையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததும், கலைந்து சென்றனர்.