/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சங்கனூர் ஓடை கரையில் ஆக்கிரமிப்புகள் ஏராளம்; பெரு மழை பெய்தால் நகரம் மூழ்கும் அபாயம்சங்கனூர் ஓடை கரையில் ஆக்கிரமிப்புகள் ஏராளம்; பெரு மழை பெய்தால் நகரம் மூழ்கும் அபாயம்
சங்கனூர் ஓடை கரையில் ஆக்கிரமிப்புகள் ஏராளம்; பெரு மழை பெய்தால் நகரம் மூழ்கும் அபாயம்
சங்கனூர் ஓடை கரையில் ஆக்கிரமிப்புகள் ஏராளம்; பெரு மழை பெய்தால் நகரம் மூழ்கும் அபாயம்
சங்கனூர் ஓடை கரையில் ஆக்கிரமிப்புகள் ஏராளம்; பெரு மழை பெய்தால் நகரம் மூழ்கும் அபாயம்
ADDED : ஜன 05, 2024 01:02 AM
கோவை;கோவையில், சங்கனுார் பள்ளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அளவீடு செய்து, அவற்றை அகற்ற, மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உருவாகும் நீரூற்றுகளில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர், அடிவாரத்துக்கு வந்ததும் நொய்யல் ஆறு, சங்கனுார் ஓடை என, இரண்டாக பிரிந்து பயணிக்கிறது.
சில சமயங்களில் அதிகனமழையாக பெய்யும்போது, நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது, குளங்களில் தண்ணீர் தேக்குவதற்கான சூழல் இல்லையெனில், ஆற்றிலேயே விட்டு விடுகின்றனர்; கோவை மாவட்டத்தை கடந்து, திருப்பூருக்கு நொய்யல் தண்ணீர் செல்கிறது.
அதேநேரம், சங்கனுார் பள்ளம் என்றழைக்கப்படும் ஓடையில் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் வெளியேற்றப்படும் கழிவு நீரே செல்கிறது; பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைபட்டிருக்கிறது. ஓடையின் இரு புறமும் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் கட்டப்பட்டு இருப்பதால், நீர் நிலையின் அகலம் சுருங்கியிருக்கிறது.
கடந்தாண்டு நவ., மாதம் பெய்த கன மழையால், சங்கனுார் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்தண்ணீர், வெள்ளக்கிணறு தடுப்பணை வழியாக சின்ன வேடம்பட்டி ஏரி, சர்க்கார் சாமக்குளம் என, வடக்கு பகுதியில் பயணித்தது.
சங்கனுார் ஓடையில் கோவை நகரை நோக்கி பயணித்தால், மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் பாலத்தை கடந்து, சத்தி ரோடு, அவிநாசி ரோடு கடந்து, திருச்சி ரோட்டை அடைந்து, சிங்காநல்லுார் குளத்தை சங்கமிக்கும். நீர் நிலைகள் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயுள்ளன.
இதன் காரணமாக, எதிர்காலங்களில் கனமழை பெய்யும்போது, வெள்ள நீர் செல்ல வழியின்றி, குடியிருப்புகள் மூழ்கும் அபாயம் இருக்கிறது. ஏனெனில், இனி வரும் காலங்களில், எதிர்பார்க்கக் கூடிய பருவ மழை, பருவ காலம் முழுவதும் பெய்யாமல், குறிப்பிட்ட சில நாட்களிலேயே முழுமையாக கொட்டித் தீர்த்து விடும் என காலநிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இதுபோன்ற சூழல் உருவானால், ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அப்போது, எதிர்பாராத பேரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
சங்கனுார் ஓடையின் கரை கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கப்பட்டு வருகிறது. காட்டாறு ஓடக்கூடிய இந்த ஓடையின் அகலம் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி இருக்கிறது; ஓடைக்குள் வீடு கட்டுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பெய்த மழைக்கு சங்கனுார் பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. இது, சங்கனுார் ஓடை கரையில் வசிப்போருக்கு ஓர் எச்சரிக்கை மணி.
இனி, கன மழை பெய்யும்போது, சங்கனுார் ஓடையில் பயணிக்கும் வெள்ள நீர், கோவையை நோக்கி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு வரும்போது, மிகப்பெரிய பாதிப்பு எதிர்நோக்க நேரிடும். அதற்கு முன் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து மாநகராட்சி, நீர் வளத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.